உகாண்டா (ஆப்பிரிக்கா): உகாண்டாவின், புண்டிபுக்யோ மாவட்டத்தில் புது வகை வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நிற்கும் போது கூட, நடனமாடிக் கொண்டே இருப்பது போல, உடல் நடுங்குவதால், இந்த தொற்று நோயிற்கு 'டிங்கா டிங்கா வைரஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும், பெண்கள் மற்றும் சிறுமிகளை இந்த வைரஸ் அதிகளவில் தாக்குவதாகவும், அதிகப்படியான உடல் நடுக்கமும் காய்ச்சலும் முக்கிய அறிகுறியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, புண்டிபுக்யோவில் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம், நோயாளிகள் ஒரு வாரத்தில் குணமடைந்து வீட்டுக்கு திரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிங்கா டிங்கா வைரஸ் அறிகுறிகள்:
- கட்டுப்படுத்த முடியாத உடல் நடுக்கம்
- காய்ச்சல், உடல் பலவீனம்
- பக்கவாதம்
மாதிரிகள் ஆய்வு: இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள், உகாண்டாவின் சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, தொற்றுக்கான காரணம் குறித்து தீவிரமாக மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotic) வழங்கப்பட்டு வருகிறது.
மூலிகை மருந்துகளை நம்புவதற்குப் பதிலாக மாவட்ட சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுமாறும், அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, சரியான கவனிப்பைப் பெறவும் மக்களுக்கு, மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் கியிதா கிறிஸ்டோபர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பாம்பு நாக்கு டாட்டூ உயிருக்கு ஆபத்தா? அசாதாரண டாட்டூக்களின் பின்னணி உளவியல் என்ன?