சென்னை:தமிழகத்தில் தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, பல்வேறு இடங்களில் வெப்பம் உச்சத்தை தொட்டு மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், வெப்பத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
வெப்ப அலையை எதிர்கொள்ள இதை சாப்பிடுங்கள்:
தர்பூசணி: உடல் உஷ்ணம் மற்றும் உடலில் ஏற்படும் வறட்சியை குறைக்கிறது.
வெள்ளரிக்காய்: வெள்ளரியில் அதிக நீர்ச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்தும் அடங்கியுள்ளதால் உடலை குளிர்ச்சியாக வைப்பது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
முலாம்பழம்(கிர்ணி):தர்பூசணியை தொடர்ந்து உடலை குளிர்ச்சியாக வைக்கக் கூடிய பழம் தான் முலாம்பழம். இதனை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. காரணம், இதனை அதிகம் எடுத்துக்கொள்வதால் சளி காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இளநீர்: இயற்கையாகவே உடல் உஷ்ணமாக இருக்கும் நபர்கள் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
வெந்தயம்: வெப்பத்தை தணிக்க காலையில் வெந்தய கஞ்சி எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால், ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரையும் வெந்தயத்தையும் எடுத்துக்கொள்வது சிறந்தது.
மோர்:வெயில் காலங்களில் காரமான உணவுகள் வயிற்றை பதம் பார்ப்பது உண்டு. அதே போல, வெப்பத்தால் வயிற்று போக்கு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இப்படியான சூழ்நிலையில், தினசரி ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் வயிறு குளிர்ச்சியடைகிறது.
கஞ்சி,கம்பு கூழ்: உடல் சூட்டை குறைக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவியாக இருக்கிறது கஞ்சி மற்றும் கம்பு கூழ். வெப்ப நாட்களில் உடலுக்கு ஏற்ற சிறந்த காலை உணவாக இருக்கிறது.
தண்ணீர்: ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்
தவிர்க்க வேண்டியவை: டீ, காபி, மதுபானங்களை அதிகமாகக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். புரதம் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளும் உடல் வெப்பத்தை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் கவனமுடன் உணவு அருந்துங்கள்.
பருத்தி ஆடை:குழந்தைகளுக்கு மென்மையான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகள், படுக்கை உறைகளைப் பயன்படுத்த வேண்டும். வேலைக்கு செல்பவர்களும் சரியான ஆடையை தேர்ந்தெடுத்து அணிவதால் வெப்பத்தால் ஏற்படும் கொப்புளங்களை தவிர்க்கலாம்.
இதையும் படிங்க:
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்