உலகளவில் உயிரைக் குடிக்கும் இரண்டாவது பெரிய நோயாக இருப்பது புற்றுநோய். மக்களை அச்சுறுத்தும் இந்த கொடிய நோய், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மற்றும் மரபணு காரணங்களால் ஏற்படுகின்றது. புற்றுநோய் குணமடைவதை விட, அந்த செல்களை வளர விடாமல் தடுப்பது சிறந்தது. இதற்கு, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு மிகவும் அவசியமானதாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்றால், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதே ஆகும். அந்த வகையில், கேன்சர் செல்களை வளர விடாமல் அழிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பூண்டு: பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. மார்பகம், பெருங்குடல், வயிறு மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோயின் அபயாத்தை குறைக்க, உணவில் அடிக்கடி பூண்டு சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
ஆப்பிள்: மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுப்பதில் ஆப்பிள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து புற்றுநோயை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களிடம் இருந்து பாதுகாக்கிறது.
ப்ரோக்கோலி: புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயைத் தடுக்க ப்ரோக்கோலி உதவுகிறது. இதில் உள்ள சல்போராபேன் (Sulforaphane) உடலில் உள்ள பாதுகாப்பு என்சைம்களை தூண்டி நச்சுக்களை நீக்குகிறது. ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
க்ரீன் டீ: இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவுக்குழாய், நுரையீரல், வாய் மற்றும் கணையப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள பாலிபினால்கள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.