மதுரை:தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதன்முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மதுரை மாநகர் ஆயுதப்படை காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் காவலர் மோகன்குமார். இவர் கடந்த ஜனவரி 30ஆம் தேதி, தன் வீட்டின் அருகே வளர்ந்திருந்த மரத்தை வெட்டும் போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், அவர் மூளைச்சாவு அடைந்தார்.
காவலர் உடல் உறுப்பு தானம்:
இதில், மோகன்குமார் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி அவரது மனைவி யோகலட்சுமியின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து, அரசு ராஜாஜி மருத்துவமனையில் உறுப்பு தானத்திற்காகக் காத்திருந்த நபர்களுக்கு 1 சிறுநீரகம், கல்லீரல், தோல், எலும்பு, கருவிழிகள் ஆகிவை வழங்கப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சி தென்னூரிலுள்ள காவேரி மருத்துவமனைக்கும், இதயம் சென்னையிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை:
அரசு ராஜாஜி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்ட கல்லீரல், 42 வயதான ஆண் நோயாளிக்கு பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை நேற்று (பிப்ரவரி 06) நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தானம் பெற்ற நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னைக்கு பறந்த இதயம்.. மறைவுக்கு பிறகு 8 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த காவலர்!
இது குறித்து அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், “தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்து முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் உடல் உறுப்பு தானக் கொள்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசின் உதவியால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
மேலும், காவலர் மோகன்குமாரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், 22 வயதான நோயாளிக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழுவால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவ குழுவினர்களில் குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் எஸ்.பத்மநாபன், எஸ்.கார்த்திகேயன், ஏ.சாஸ்தா, ஆர்.வில்லாளன், எஸ். பாலமுரளி, எம்.கண்ணன், ரமணி, மயக்கவியல் மருத்துவர்கள் கல்யாண சுந்தரம், வைரவராஜன், சண்முக சுந்தரம், செந்தில் குமார், பாலமுருகன், ரமேஷ், பிரமோத், முரளி, செவிலியர்கள் ஜோதி, விஜயலட்சுமி, CMCHIS ஊழியர் சித்ரா, ரத்த வங்கி மருத்துவர் சிந்தா ஆகியோரை மருத்துவமனை முதல்வர் வெகுவாக பாராட்டினார்.