தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? அதிகமாக குடித்தால் என்ன நடக்கும்! - EXCESS WATER INTAKE SIDE EFFECTS

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது இரத்தத்தில் சோடியத்தின் அளவை குறைத்து வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Health Team

Published : Jan 25, 2025, 1:24 PM IST

உடலை நீரேற்றமாக வைப்பதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அளவிற்கு மீறி தினசரி தண்ணீர் குடிப்பது பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். இந்த சூழலில், ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

காலையில் எழுந்தவுடன் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஜானகி ஸ்ரீநாத். உடல் செயல்பாடு மற்றும் வானிலை நிலைமைகள் ஒரு நபர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. ஏசியில் வேலை செய்பவரை விட வெயிலில் வயலில் வேலை செய்யும் விவசாயிக்கு அதிக தண்ணீர் தேவை என்று விளக்குகிறார். வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் வசிப்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றவர்களை விட அதிக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோப்புப்படம் (Credit - Pexels)

சுமார் 70 கிலோ எடையுள்ள, சாதாரண உடல்நிலை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது, 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இருப்பினும், இவை அனைத்தும் ஒரு மணிநேர இடைவெளியில் உட்கொள்ளப்பட வேண்டும், ஒரே நேரத்தில் அல்ல. குறிப்பாக சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி தண்ணீர் குடிக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகளின் இரத்தம் அடர்த்தியாக மாறுவதால் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். --டாக்டர் ஜானகி ஸ்ரீநாத், ஊட்டச்சத்து நிபுணர்

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது இரத்தத்தில் சோடியத்தின் செறிவைக் குறைத்து ஹைபோநெட்ரீமியாவுக்கு (Hyponatremia) வழிவகுக்கிறது என்கிறார் டாக்டர் ஜானகி ஸ்ரீநாத். இதன் விளைவாக, வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிக தண்ணீர் குடித்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என, எச்சரிக்கப்படுகிறது.

இதனால், பொட்டாசியம் அளவும் குறைந்து, கால்களில் எரிச்சல் மற்றும் மார்பில் வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர, குழம்பு , மோர் போன்ற திரவங்களுடன் சாதம் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கத் தேவையில்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது. ஆனால், தோசை, சப்பாத்தி, காரமான உணவுகள் சாப்பிடும்போது தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்.

வயதிற்கேற்ப யார் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:

  1. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் 4 கப் குடிக்கலாம். (சுமார் 950 மில்லிலிட்டர்கள்)
  2. 4-8 வயது குழந்தைகள் 5 கப் (சுமார் 1.1 லிட்டர்) குடிக்க வேண்டும்
  3. 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 7-8 கப் (சுமார் 1.8 லிட்டர்) குடிக்கவும்.
  4. பெண்கள் ஒரு நாளைக்கு 2.7 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
  5. ஆண்கள் ஒரு நாளைக்கு 3.7 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.

இதையும் படிங்க:

படுத்ததும் ஆழ்ந்து தூங்க வேண்டுமா? இந்த மிலிட்டரி ஸ்லீப்பிங் டிர்க் கண்டிப்பா உதவும்!

கண்களுக்கு கீழ் வீக்கம்? தடுக்க உதவும் 6 சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு: இங்கே, உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர் ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்கிறோம்.

ABOUT THE AUTHOR

...view details