தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

பிரசவத்திற்கு பின் பெல்ட் அணிந்தால் தொப்பை குறையுமா? மகப்பேறு மருத்துவர் சொல்வது என்ன? - MATERNITY BELT AFTER DELIVERY

பிரசவித்த பெண்கள் தங்கள் வயிற்று கொழுப்பைக் குறைக்க பெல்டுகளை பயன்படுத்துகின்றனர். பெல்ட் அணிவதால் உண்மையில் தொப்பை குறைகிறதா? அது நல்லதா? என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் கூறுவதை பார்க்கலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT -ETVBharat)

By ETV Bharat Health Team

Published : Oct 14, 2024, 11:14 AM IST

கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது வரை என ஒரு பெண்ணின் உடலில் இயற்கையாகவே ஏராளமான மாற்றங்கள் நிகழ்கின்றன. கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்காக, பெண்களின் கருப்பை, வயிற்றை சுற்றியுள்ள தோல், தசைகள், தசைநார்கள் விரிவடைகின்றன.

நார்மல் டெலிவரி, சிசேரியன் என்பதை தாண்டி, இயல்பாகவே பிரசவித்த பெண்களுக்கு தொப்பை ஏற்படுகிறது. குறிப்பாக, பிரசவத்திற்குப் பிறகு தொப்பை அதிகமாக தெரிவதற்குக் காரணம் கர்ப்ப காலத்தில் தசைகள் அதிகமாக நீட்டப்படுவதும், பிரசவத்திற்குப் பிறகு தளர்வாக இருப்பதும் தான் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சவிதாதேவி.

அதுமட்டுமல்லாமல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பால் வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்கிறது. இதை மற்றொரு காரணமாக கருதலாம். குழந்தையின் வளர்ச்சிக்காக கர்ப்ப காலத்தில் பெண்களில் தசைகள் பக்கவாட்டில் நகர்கின்றன. குழந்தை வெளியே வந்த பின்னர், இந்த தசைகள் தொங்குவதற்கு தொடங்கிவிடுகின்றன.

தொப்பை குறையுமா?: பிரசவத்திற்குப் பிறகு தொப்பையைக் குறைக்க பெல்ட்டைப் பயன்படுத்தினால், அது வடிவயிற்றின் தசைகளைத் தாங்கி, அடிவயிற்றின் சுற்றியுள்ள பகுதியை ஆதரிக்கிறது. ஆனால், இது நிரந்தர்த் தீர்வாகாது என்கிறார் மருத்துவர் சவிதா. அதுமட்டுமல்லாமல், பெல்ட் அணிவதால் தொப்பை குறையாது என்கிறார்.

தளர்வாக இருக்கும் தசைகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உடற்பயிற்சி அவசியம். குறிப்பாக, வயிறு மற்றும் இடுப்புக்கு அருகில் உள்ள மைய தசைகளை வலுப்படுத்த கிரன்ஞ்சஸ் (Crunches), பிளாங் (Plank), பைலேட்ஸ் (Pilates) போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பயிற்சிகள், தசைகளை இறுக்கமாகி தொப்பை குறைக்க உதவுகிறது.

பெல்ட் பயன்பாடு:மெட்டர்னிட்டி பெல்ட், புதிதாக குழந்தை பிறந்த தாய்மார்களின் வயிறு மற்றும் கீழ் முதுகு பகுதியை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் தசைகள் மற்றும் முதுகு பகுதி பலவீனமடைகிறது. இந்த பெல்ட் அணிவதால் தசைகள் மீதான அழுத்தம் மற்றும் வலி குறையும். நார்மல் மற்றும் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு உடல் அமைப்பு ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. எனவே, பெல்ட் அணிவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிருப்பது கட்டாயம்.

கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை?: சிலர், லிபோசக்ஷன் (Liposuction) செய்வதை பற்றி யோசிக்கிறார்கள். லிபோசக்ஷன் என்பது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்றுவதற்கான ஒரு அறுவை சிகிச்சை. குழந்தை பிறந்த பின்னர், ஒரு பெண்ணின் உடல் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கே பல நாட்கள் ஆகின்றன. இப்படியான சூழ்நிலையில் குறைந்தது ஆறு மாதம் வரையிலாவது காத்திருக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் என்கிறார் மருத்துவர்.

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details