சென்னை:மரம் வெட்டும் இயந்திரத்தில் தற்செயலாக ஏற்பட்ட விபத்தில் இடது கை மணிகட்டு வெட்டப்பட்ட நபருக்கு, அறுவை சிகிச்சை செய்து மீண்டும் ஒட்டி வைத்து ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, “செங்கல்பட்டைச் சேர்ந்த சரவணன் (29). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள மரக் கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5-ம் தேதி சோழிங்கநல்லூரில் வேலை செய்யும் இடத்தில் மரம் வெட்டும் இயந்திரத்தில் தற்செயலாக இடது மணிகட்டு வெட்டப்பட்ட நிலையில், ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப் பெற்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இடது கை மணிக்கட்டு முழுவதும் வெட்டப்பட்டு, கை விரல்களுக்கும் செல்லும் ரத்தநாளங்கள் மற்றும் தசைநார்கள் முழுவதுமாக வெட்டப்பட்டு அசைவற்று காணப்பட்டுள்ளன. அனைத்து கை விரல்களும் ரத்த ஓட்டமின்றி வெளுத்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும், எக்ஸ்ரே பரிசோதனையில் இடது கை எலும்பு (இரேடியல்) முறிவு கண்டறியப்பட்டுள்ளது.
இதில், கை மறு இணைப்பு செய்வதற்கு ஏதுவான 6 மணி நேரத்திற்கும் தாமதமாக நோயாளி வந்ததால், அரை மணி நேரத்திற்குள் பரிசோதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் பெற்று அறுவை சிகிச்சை அறைக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மயக்கவியல் நிபுணர்களால், நோயாளிக்கு முழு மயக்கம் (General Anesthesia) கொடுக்கப்பட்டுள்ளது.