தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

இனி தழும்பு இல்லாமல் தைராய்டு அறுவை சிகிச்சை...அப்பல்லோ புது முயற்சி! - Thyroidectomy operation in apollo - THYROIDECTOMY OPERATION IN APOLLO

Thyroid operation without scar in neck: ரோபோ உதவியுடன் கழுத்தில் எவ்வித தழும்புகளையும் உருவாக்காமல் தைராய்டு சுரப்பி நீக்கும் செயல்முறையை அப்பல்லோ கேன்சர் சென்டர் உருவாக்கியுள்ளது. அக்குள் பகுதியில் 4 செ.மீட்டர் அளவில் சிறிய வெட்டு போடப்பட்டு சுரப்பி நீக்கப்படுகிறது.

நிபுணர் பி வெங்கட்
நிபுணர் பி வெங்கட் (Credits - ETVBharat TamilNadu)

By ETV Bharat Health Team

Published : Sep 11, 2024, 5:12 PM IST

சென்னை:தைராய்டு புற்றுநோய்க்கான சிகிச்சையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு உறுப்பு அகற்றல் செயல்முறையை அப்பல்லோ கேன்சர் சென்டர் செய்துள்ளது.

நிபுணர் பி வெங்கட் பேட்டி (Credits - ETVBharat TamilNadu)

தைராய்டக்டோமி என அழைக்கப்படும் சிகிச்சையானது, தொண்டையில் முன்புறத்தில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றுவதாகும். ரோபோடிக் அசிஸ்டெட் ப்ரெஸ்ட் ஆக்சில்லோ இன்சுப்லேஷன் தைராய்டெக்டோமி (RABIT) நுட்பம் என்பது கழுத்தில் வெளிப்படையாக தெரியக்கூடிய தழும்பில்லாமல் அறுவை சிகிச்சை முறையாகும்.

பெண்களுக்கே அதிகம் பாதிப்பு:இந்தியாவில் தைராய்டு புற்றுநோய் விகிதங்கள் கவலைப்படும் அளவிற்கு அதிகரித்து வருகின்றன. அதுவும் குறிப்பாக 30 வயதிற்கு குறைவான இளவயது நபர்களிடமும், பெண்களிடமும் இது அதிகமாக காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகள் கால அளவில் தைராய்டு புற்றுநோயின் நேர்வு பெண்களில் 62 சதவீதமும், ஆண்களில் 48 சதவீதமும் அதிகரித்திருக்கின்றன.

தைராய்டு புற்றுநோய்கள், சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியவை. இதில் மிக முக்கியமான சிகிச்சையாக இருப்பது அறுவைசிகிச்சையும் மற்றும் அதைத்தொடர்ந்து வழங்கப்படும் கதிரியக்க அயோடின் சிகிச்சையாகவும் இருக்கின்றன. ரோபோடிக் தைராய்டக்டோமி என்பது, மிக குறைவான ஊடுருவல் உள்ள ஒரு மருத்துவ செயல்முறை.

அறுவை சிகிச்சை முறை?:இதில் கழுத்தில் எவ்வித தழும்புகளையும் உருவாக்காமல் தைராய்டு சுரப்பி நீக்கப்படும். இந்த அறுவை சிகிச்சைக்காக அக்குள் பகுதியில் 4 செ.மீட்டருக்கும் அதிகமில்லாத ஒரு சிறிய வெட்டு செய்யப்படும். ஆகவே தைராய்டு அகற்றலின் பொதுவான சிக்கல்களாக இருந்துவரும் குரலில் மாற்றம் மற்றும் இரத்தத்தில் இயல்புக்கு மாறாக குறைவான கால்சியம் அளவுகள் போன்றவற்றை குறைக்க முடியும்.

இது குறித்து, அப்பல்லோ கேன்சர் சென்டர்ஸ் அறுவைசிகிச்சை புற்றுநோயியலின் முதுநிலை நிபுணர் பி வெங்கட் ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறும்போது,"தமிழ்நாட்டில் 25 நோயாளிகளுக்கு இந்த அறுவைசிகிச்சை செய்து இருக்கிறோம். நோயாளிகள் பயனடைந்து உள்ளனர். அறுவை சிகிச்சை செய்து முடித்தும் தழும்புகள் இருக்காது. தைராய்டு அறுவை சிகிச்சை செய்யும் போது குரல் மாற்றம் இருக்காது.

இரண்டு பக்கமும் நரம்பு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். பேரா தைராய்டு போன்ற தைராய்டு பிரச்சனைகளில் மிகவும் கவனமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது. கால்சியத்தின் அளவு ரத்தத்தில் மிக முக்கியமான ஒன்று. நோயாளிகள் தழும்பு இல்லாத வகையில் அறுவை சிகச்சை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள்.

தழும்பு யாருக்கும் பிடிப்பதில்லை: ஏன் என்றால் யாருக்கும் தழும்புகள் பிடிப்பதில்லை. தழும்பு இருக்கும்போது அதைப்பற்றி எல்லோரும் கேள்வி கேட்பார்கள். மிகவும் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய் இந்த தைராய்டு. அறுவை சிகிச்சை செய்தற்கான அறிகுறியே இருக்காது. தழும்புகள் இல்லாமல் நல்ல குரலோடு கால்சியத்தோடு இருப்பார்கள்.

செலவு எவ்வளவு?: இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள நான்கு மணி நேரம் ஆகும். இதற்கான செலவு 5 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து 6 லட்சம் ரூபாய் வரை ஆகும். தைராய்டு நோய்க்கு அறுவை சிகிச்சை தான் மிக முக்கிய காரணம், தைராய்டு பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

அயோடின் உப்பு அவசியம்:அயோடின் உப்பு இல்லாமல் சாப்பிடுவதால் தைராய்டு பிரச்சனை அதிகமாக வரும். அதற்கு ஆரம்பத்தில் கவனம் எடுத்து கொண்டு சாப்பிட வேண்டும். எல்லோரும் அயோடின் உப்பு சாப்பிட வேண்டும். இந்தியாவை பொருத்தவரைக்கும் மரபணு மூலமாக இந்த புற்று நோய் வருவது மிகவும் குறைவு.

தைராய்டு கட்டி நீண்ட நாட்களாக இருக்கும்போது தைராய்டு புற்று நோயாக மாறாததற்கு வாய்ப்புள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய்க்கு முன்கூட்டியே தடுப்பூசி உள்ளது. இந்த தைராய்டு புற்று நோய் வீரியம் மிகவும் குறைவு. 99 சதவீதம் சரி செய்யக்கூடியது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details