சென்னை: சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் மாணவிகள், நேற்று மாலை கல்லூரி வளாகம் அருகே ஸ்ரீராம் நகர் பிரதான சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளனர். நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த மாணவிகளை, அதே பேக்கரியில் பணிபுரியும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு மட்டுமல்லாமல், ஒருவருக்கு பாலியல் தொந்தரவையும் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த புகார் அனுப்பப்பட்டு, பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து பேக்கரியில் பணியாற்றிய உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதே பகுதியில் ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு, பேக்கரி ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பேக்கரி ஊழியர் மட்டும் தான் ஈடுபட்டாரா? அல்லது வேறு எவரேனும் தொடர்பில் உள்ளாரா? என்பது குறித்து உரிய விசாரணையை நடத்த வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரண குறித்து கோட்டூர்புரம் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்று கூறினார்.
இதுகுறித்து சென்னை ஐஐடி விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு பெண் ஆராய்ச்சி மாணவர் நேற்று மாலை 5.30 மணியளவில் வேளச்சேரி - தரமணி பகுதியில் உள்ள ஐஐடி வளாகத்திற்கு வெளியே உள்ள தேநீர் கடையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அந்த மாணவியுடன் இருந்த மாணவிகளும், பொதுமக்களும் குற்றவாளியை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் குற்றவாளியை பிடித்து ஐஐடி-க்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் வெளியே உள்ள பேக்கரியில் வேலை செய்கிறார். அவருக்கும் ஐஐடி-க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஐஐடி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவிக்கு முழுமையாக அனைத்து ஆதரவையும் சென்னை ஐஐடி வழங்குகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.