தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? - இதய நல மருத்துவர் தணிகாசலம் அளித்த விளக்கம் - Cause of heart attack

Cause of heart attack: இன்றைய காலக்கட்டத்தில் மக்களிடையே மாரடைப்பு அதிகரிப்பதற்கான காரணம் மற்றும் பெண்களுக்கு மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கிறார் இதய நல மருத்துவ இயக்குநர் தணிகாசலம்

மாடரைப்பு பிரச்சனை(கோப்பு படம்), மருத்துவர் தணிகாசலம்
மாடரைப்பு பிரச்சனை(கோப்பு படம்), மருத்துவர் தணிகாசலம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 12:16 PM IST

சென்னை:வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்ற நிலை மாறி, தற்போது இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி வருகிறது. இதற்கு நமது உணவு பழக்கம் என்று நாம் எண்ணி வரும் நிலையில், அதிகப்படியான மன அழுத்தமும் ஒரு காரணம் என விவரிக்கிறார் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதய நல இயக்குநர் தணிகாசலம்.

இதய நல மருத்துவர் தணிகாசலம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் 'இடையீட்டு இதய நல மருத்துவம் நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட இருதய நல மருத்துவர்கள் பங்கேற்றனர். மேலும் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதய நல இயக்குநர் தணிகாசலம், மருத்துவ பேராசிரியர்கள் மூர்த்தி, ரமேஷ், நாகேந்திர பூபதி மற்றும் மருத்துவக்கல்லூரியின் தலைவர் பாலாஜிசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மாரடைப்பு:நிகழ்ச்சிக்குப் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இருதய நல இயக்குநர் தணிகாசலம், "தற்போதைய காலகட்டத்தில் எதனால் அதிகளவு மாரடைப்பு அதாவது ஹார்ட் அட்டாக் (Heart Attack) ஏற்படுகின்றது என்ற கேள்வி மக்களிடையே இருக்கின்றது. முன்பெல்லாம் மக்கள் 37 ஆண்டுகள் வாழ்வதே கடினமாக இருந்தது. ஆனால் தற்போது மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியால் 80 ஆண்டுகள் வரை வாழ்கின்றனர்.

அமெரிக்கா ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்களை விட வயது முதிர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். வயது முதிர்ச்சியின் காரணமாக இருதய பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. முன்பெல்லாம் மரடைப்பு 80 வயதில் வரும் என்ற எண்ணம் இருந்தது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மாரடைப்பு வராது என்ற எண்ணம் இருந்தது. அது இப்போது முற்றிலுமாக மாறி உள்ளது.

மன அழுத்தத்தால் மாரடைப்பு:பணி புரியும் மக்கள் தங்கள் வேலையை எந்தவித பதட்டமும், மன அழுத்தமும் இல்லாமல் செய்ய வேண்டும். தங்களது பணியை நாள் முழுவதும் மன அழுத்தத்துடன் செய்தால் அது இதயத்தை பாதிக்கும். இது தவிர அதிகப்படியான உணவுகளை உட்கொள்ளுவதால் ஏற்படும் உடல் பருமனால் இதயம் பாதிப்பு ஏற்படும். முந்தைய காலத்தில் பெண்கள் அலுவலக பணி, வீட்டு நிர்வாகம், குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவில்லை.

பெண்களிடையே மாரடைப்பு:இன்றைய காலகட்டத்தில் பெண்களும் அலுவலகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். ஆண்களை விடவும் பெண்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். அதுமட்டுமின்றி வீடு நிர்வாகத்துடன் குழந்தைகளையும் தங்களது கவனிப்பில் வைத்து கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்படும். எனவே முந்தைய காலம் போல தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படாது என்று கூற இயலாது.

எப்படி தடுப்பது?:இவற்றைத் தடுக்க வேண்டும் என்றால் சிறந்த உணவு பழக்கம், உடற்பயிற்சி, மன அமைதி இவற்றுடன் மன அழுத்தம் இன்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியா முந்தைய காலகட்டத்தில் தொழில்நுட்ப ரீதியாக மருத்துவத்தில் பின்தங்கி இருந்தது. ஆனால் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியாவிற்கு சிகிச்சைக்காக மக்கள் வருகை தருகின்றனர். இது உலக நாடுகளின் புருவத்தை உயர செய்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இதயத்தில் அறுவை சிகிச்சை மற்றும் அடைப்பை அகற்றும் தொழில்நுட்பத்தில் நம் நாடு பெறும் வளர்ச்சி அடைந்திருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:இரத்த உறைகட்டிகளை அகற்றும் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி.. தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் அறிமுகம்! - ANGIOPLASTY IN MEENAKSHI MISSION

ABOUT THE AUTHOR

...view details