சென்னை:தமிழ் திரையுலகில் அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 'மொழி' போன்ற தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் 'சட்னி-சாம்பார்' என்னும் இணைய தொடர் உருவாகியுள்ளது.
இதில், நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.இந்நிலையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று (ஜூன் 21) வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இந்த வெப் சீரிஸ் எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பதை மிகத்தெளிவாக சொல்லும்படி அமைந்துள்ளது. போஸ்டரில் யோகி பாபு ஒரு டைனிங் டேபிளின் மையத்தில், அவரது அப்பாவி முகத்துடன் அமர்ந்திருக்கிறார், அவரைச் சுற்றிப் புன்னகை ததும்ப மற்ற நடிகர்கள் அனைவரும் அருகில் இருக்கின்றனர்.
இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.