சென்னை: கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், கேரள திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு மலையாள திரைப்படத் துறை அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டம் கடந்த வியாழக்கிழமை (பிப்.06) கொச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மலையாள சினிமா சந்தித்து வரும் நிதி நெருக்கடி, நடிகர்களின் சம்பள உயர்வு, பொழுதுபோக்கு வரி உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் இதற்கெல்லாம் தீர்வு காணும் விதமாக வருகிற ஜூன் 1ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் படப்பிடிப்புகள் நடைபெறாது, திரையரங்குகள் மூடப்படும், சினிமா தொடர்பான எந்த நிகழ்வும் நடைபெறாது என கேரள திரைப்பட அமைப்புகள் ஒருங்கிணைந்து சங்கம் அறிவித்துள்ளது. ஜிஎஸ்டியுடன் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள கூடுதல் பொழுதுபோக்கு வரியை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும், நடிகர்கள் தங்களது ஊதியத்தைக் குறைக்க வேண்டும் என்பதுதான் இந்த திரைப்பட அமைப்புகள் கூட்டாக முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள் ஆகும்.
One more “proposed cinema strike” in Malayalam film industry. from June 1, after a joint meeting of film organisations!
— Sreedhar Pillai (@sri50) February 6, 2025
The demands are the usual-
1. state government should withdraw the entertainment tax along with GST!
2. Producers want Actors to reduce their salaries!
இதனை செய்யவில்லையென்றால் ஒரு தயாரிப்பாளரால் திரைப்படத் தயாரிப்புச் செலவை தாங்க முடியாது என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கேரளா தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஜி.சுரேஷ் குமார் கூறும்போது,”மலையாளத்தில் கடந்த ஆண்டு மட்டும் 176 சினிமாக்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் மலையாள சினிமா 101 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளது.
ஜனவரி மாதம் வெளியான 28 படங்களில் 'ரேகாசித்திரம்' மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளது. திரைப்படத் தயாரிப்புச் செலவில் 60 சதவிகிதம் நடிகர், நடிகைகளின் சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. புதிய நடிகர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கின்றனர். தொழில்நுட்பப் பணியாளர்களில் 60 சதவிகிதத்தினர் பட்டினியில் வாடுகின்றனர்.
50 நாட்களில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பை 150 நாட்கள் நீட்டிக்கின்றனர். நடிகர்கள் வாங்கும் சம்பளத்தின் 10 சதவிகிதம்கூட தியேட்டர்களில் வசூல் ஆகவில்லை. பெரிய பட்ஜெட் படமான ஐடென்டிட்டி 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இருப்பினும், திரையரங்குகளில் இருந்து படம் ரூ.3.5 கோடி மட்டுமே வசூலித்தது. மேலும், 17 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான டொமினிக் திரைப்படம், 4.5 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளது.
![மலையாள சினிமா வேலை நிறுத்தம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/23501571_1.jpg)
இதே நிலைமை தொடர்ந்தால், தயாரிப்பாளர்களால் தயாரிப்பு செலவை கட்டுப்படுத்த முடியாது. எனவே ஜூன் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். வரிகுறைப்பு தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சினிமா நடிகர், நடிகைகள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். இதற்கு முடிவு கட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: விருது வென்ற வெற்றிமாறனின் ’பேட் கேர்ள்’ திரைப்படம்... ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மரியாதை
கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய அளவில் மிகப்பெரிய இலாபம் ஈட்டிய படங்களின் பட்டியலில் மஞ்ஞுமேல் பாய்ஸ், பிரேமலு என மலையாளப் படங்களே அதிகமாக இருந்தன. இருப்பினும் இப்படியான நிதி நெருக்கடி மலையாள சினிமாவில் அனைத்து திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.