சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.8) நடந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 1,15,709 (74.7) வாக்குகளில் முன்னிலை வகித்தார். நாம் தமிழர் வேட்பாளர் எம்.கே. சீதாலட்சுமி 24,151 (15.59) வாக்குகளில் பின்தங்கினார்.
இதில் சுவாரசியமாக நோட்டாவுக்கு 6,109 (3.94) வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மொத்தமாக 798 நோட்டா வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. ஆனால், இம்முறை 6,109 வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, ஆளும் கட்சியான திமுகவுக்கும், தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி உட்பட எவருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை கடந்த முறையை விட அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது.
2021 சட்டமன்ற தேர்தல்
அதே போல கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் யுவராஜா 58,396 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 11,629 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 10,005 வாக்குகளை பெற்றிருந்தன. அந்த தேர்தலில் 1,546 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியிருந்தன. திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகள் போட்டியிட்ட அந்த பொது தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் 1,546 பேர் நோட்டாவுக்கு வாக்கு செலுத்தியுள்ளனர்.
இடைத்தேர்தல் - 2023
அந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற பெரியாரின் கொள்ளுப்பேரனும், ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகனுமான காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா கடந்த 2023 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். அதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அதே ஆண்டு ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈவிகேஎஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அபார வெற்றியடைந்தார்.
தமிழ்நாடே உற்றுநோக்கிய அந்த இடைத்தேர்தலில் அதிமுக, நாதக உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைத்த அதிகபட்ச வாக்குகள் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை படுதோல்விக்கு தள்ளியது. இருப்பினும், அந்த இடைத்தேர்தலில் 798 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. ஆயிரத்துக்கும் குறைவான இந்த எண்ணிக்கை போட்டியிட்ட கட்சிகளுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இடைத்தேர்தல் - 2025
இந்த நிலையில், ஈரோடு கிழக்கில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், 1,546 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் 798 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தான. ஆனால், இம்முறை 6,109 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியிருப்பது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. மேலும், இந்த இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடாத சூழலில், நோட்டாவுக்கு அதிகமான வாக்குகளை மக்கள் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.