சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்கள் கூட்டுறவு துறையின் சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு மலிவு விலையில் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்களை சிலர் சட்ட விரோதமாக மற்ற மாநிலங்களுக்கு கடத்தி செல்லும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தடுக்கும் பணியில் சிவில் சப்ளை குற்ற புலனாய்வு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கடத்தப்பட்ட அரசி மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்களை நாள்தோறும் பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 9 கோடி மதிப்பிலான கடத்தல் ரேஷன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சிவில் சப்ளை குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
''தமிழ்நாடு முழுவதும் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 11,085 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக சுமார் 9 கோடி மதிப்புள்ள 33,980 குவிண்டால் ரேஷன் அரிசியும், 18,898 லிட்டர் மண்ணெண்ணையும், 1,984 கியாஸ் சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி! 'டெபாசிட்' இழந்த நாதக; நோட்டா 3-வது இடம்!
மேலும், ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 11,571 நபர்கள் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய சுமார் 2,012 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 89 பேருக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. ரேஷன் பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் 41 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், ரேஷன் அரசி பொருட்கள் கடத்தல் தொடர்பாக 18005995950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும், 9677736557 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.