கோயம்புத்தூர்: நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம் ரவி, ஏழு கடல் ஏழு மலை படத்தின் இயக்குநர் ராம், நடிகை அஞ்சலி, அனிகா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாக உள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
முதல் சிங்கிள் பாடலை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய இயக்குநர் ராம், "காதலர் தினத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. காதல் மனிதன் உருவானதற்கு முன்பில் இருந்தே உலகத்தில் இருந்து வருகிறது. காதல் என்பது பாலின வேற்றுமை, சாதி, மதத்தை தாண்டியது. காதல் என்கிற பிரபஞ்ச சக்திதான் இந்த உலகத்தை தன் கையில் பிடித்து வைத்திருக்கிறது.
ஏழு கடல் ஏழு மலை படம் உருவாக காரணம் கடந்த 2019இல் “மனித குலம் நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு” என்ற புத்தகத்தை படித்தேன். அதில் ஒரு பகுதியில் இரண்டாம் உலகப் போர் நடைபெறுகிறது. மிகப்பெரிய அழிவுகள் நடந்த காலம், அப்போது ராணுவ கமாண்டர் ஒருவர், தனது வீரர்களுக்கு எதிரே உள்ள மனிதர்களை சுட உத்தரவிடுகிறார்.