தூத்துக்குடி:இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. மாரி செல்வராஜ் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை படமாக எடுத்து உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எழுத்தாளர் சோ.தர்மன் வாழை படம் குறித்த ஒரு குற்றச்சாட்டை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், “ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். வாழை படம் பாருங்கள், உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று கூறினர். இன்று படம் பார்த்தேன். என்னுடன் பிறந்த தம்பியும், என் தாய்மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழை தான் பிரதான விவசாயம், நான் அங்கு போகும்போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தைப் பார்த்து எழுதியது தான் என்னுடைய "வாழையடி......" என்கிற சிறுகதை.
என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள் அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.
வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என் கதை இலக்கியமாகவே நின்றுவிட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒரு படைப்பாளி என்ற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி" என்ற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றுள்ளது” என பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வாழை கதை விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் சோ.தர்மன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ”நான் திரைப்படங்கள் பெரிதாக பார்ப்பதில்லை. ஆனால் என்னுடைய நெருங்கிய எழுத்தாளர்கள் வாழை திரைப்படம் பார்த்தீர்களா? என்று கேட்டார்கள். என்ன என்று கேட்கும் போது, நீங்கள் எழுதிய நீர்ப்பழி சிறுகதையை தான் படமாக்கி உள்ளார்கள் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று வாழை திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழை திரைப்படத்தை சிறுகதையாக எழுதியுள்ளேன். என்னுடைய சிறுகதைக்கு பெயர் வாழையடி என்று இருக்கும். ஏனென்றால் வாழையடி, வாழையாக சிறுவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்று எழுதியிருப்பேன். நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத் தான் தற்போது மாரி செல்வராஜ் காட்சி ஊடகத்தில் வாழை தலைப்பில் திரைப்படமாக கொண்டு வந்துள்ளார்.
வாழை திரைப்படத்தில் சிறுவர்கள் வாழைத்தார் தூக்கி கஷ்டப்படும் காட்சிகள், இடைத்தரகர்களால் ஏற்படும் பிரச்னைகள், தண்ணீரில் விழும் காட்சிகள் என என்னுடைய சிறுகதையில் வரக்கூடிய அத்தனை கதைகளும் வாழை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. சினிமாவிற்காக படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் தவிர, முழுக்க முழுக்க என்னுடைய கதைதான்.