மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன போலி வீடியோ விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மாவட்ட பாஜக தலைவராக இருந்த அகோரம் மீது வழக்கு பதிவாகி அவர் கைது செய்யப்பட்டதால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்புக்கான கருத்து கேட்பு கூட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட 13 பேர் மாவட்ட தலைவருக்கு போட்டியிடுகின்றனர்.
பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் 59 வாக்காளர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர். முடிவில், வாக்குப்பெட்டி சென்னை கமலாலயத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இதைத் தொடர்ந்து, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''பாஜக மாவட்ட தலைவர் தேர்தலுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்டங்கள் தோறும் நடத்தி வருகிறோம். இத்தேர்தல் கருத்துக்கேட்புக் கூட்டம் 6-ஆம் தேதியுடன் அனைத்து மாவட்டங்களிலும் முடிவடைகிறது. ஜனவரி 15-ஆம் தேதியில் இருந்து 20-ஆம் தேதிக்குள் பாஜக மாநில தலைவர்கள் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கிளை கமிட்டி, மண்டல தலைவர்கள் தேர்தலுக்கு பிறகு மாவட்ட தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மாநில தலைவரை தேர்வு செய்வார்கள்'' என தெரிவித்தார்.
சிபிஎம் பாலகிருஷ்ணன் சர்ச்சை
தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் அவசர நிலை பிரகடனமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருப்பது வேடிக்கை, வினோதம், ஆச்சரியம், அவமானம். எமர்ஜென்சி காலத்தில் எதிர்க்கட்சிகாரர்கள் ஒன்றிணைத்து போராடினோம். அதில், சிபிஎம் கட்சியினரும் பங்கேற்று பேராடினர். 20 அம்ச திட்டத்தை இந்திராகாந்தி கூறியபோது நான் 21 அம்ச திட்டங்களை நிறைவேற்றுவேன் என மறைமுகமாக இந்திராகாந்தியை மு.கருணாநிதி விமர்சித்து பேசினார். அப்போது திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
அப்போது, திமுகவினரே ஓடி ஒளிந்தபோது ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனசங்கம் தான் வெளியில் நின்று போராடியது. அப்போது, சிபிஎம் கட்சி ஓடி ஒளியவில்லை. அப்படிப்பட்ட கட்சி ரூ. 25 கோடிக்கு திமுகவிடம் தன்னை அடமானம் வைத்துவிட்டு, இன்றைக்கு தமிழகத்தில் அவசர நிலைபோல் இருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. உங்கள் பரிசுத்தத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால் கூட்டணியை விட்டு வெளியில் வாருங்கள். நீங்கள் வெளியில் வருவதால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடாது.
ஆனால், உங்கள் தார்மீக பொறுப்பாவது காப்பாற்றப்படும். கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். பாஜக கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம். அதேசமயம் யாரையும் நாங்களாக சென்று அழைக்க மாட்டோம். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வழக்கில் மில்லியன் டாலர் கேள்விகள் உள்ளது. எங்கேயோ, ஏதோ ரகசியம் உள்ளது. ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. அதிகாரபூர்வமாக விசாரணையில் தெரிய வந்தால் ஆளும் கட்சிக்கு சாவுமணி அடிக்க முடியும். யூகத்தின் அடிப்படையில் கூறினால் சாட்சியை கலைப்பார்கள். அதனால், நாங்கள் தற்போது எதுவும் கூற தயாராக இல்லை. என்று எஸ்.ஆர். சேகர் கூறினார்.