சென்னை:தமிழ் சினிமாவில் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரும் மிகப் பெரிய ஆளுமைகள். இருவரும் இணைந்து கொடுத்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் இன்றளவும் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது. முதல்முறையாக பாரதிராஜாவை சந்தித்த வைரமுத்து தனது 'திருத்தி எழுதாத தீர்ப்புகள்' என்ற கவிதை புத்தகத்தை பாரதிராஜாவிடம் நீட்டிவிட்டு முடிந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்கிறார்.
கவிதைகளை படித்த பாரதிராஜா வியந்து போய் இளையராஜாவிடம் அறிமுகம் செய்கிறார். மெட்டுக்கு எழுதுவீர்களா என்று கேட்டதற்கு முயற்சி செய்கிறேன் என்கிறார் வைரமுத்து. இளையராஜா மெட்டமைக்க உருவானதுதான் நிழல்கள் படத்தில் 'இதுவொரு பொன்மாலை பொழுது' என்ற பாடல். அப்போதே வைரமுத்துவை கட்டியணைத்து பாராட்டினார் இளையராஜா.
அதன்பிறகு பல ஆண்டுகள் இந்த இணை இசை உலகில் கோலோச்சியது. பின்னர் மற்ற இசை அமைப்பாளர் இசையிலும் பாடல்கள் எழுதிவந்தார் வைரமுத்து. இதனால் இளையராஜாவின் ஒளிப்பதிவுக்கு தாமதமாக வரத் தொடங்கினார். அன்றிருந்துதான் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது என்கின்றனர். அதுமட்டுமின்றி சில பாடல் வரிகளில் இளையராஜா தலையிட விரிசல் மேலும் வலுப்பெற்றது.
வைரமுத்து எப்போதும் ஒரு படத்தில் முழு பாடல்களையும் அவரே எழுதும் பழக்கம் உடையவர். இந்த நிலையில் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் ஒரு பாடலை வாலியை வைத்து எழுத வைக்கிறார் இளையராஜா. இது மீண்டும் இருவருக்குள்ளும் விரிசலை அதிகரித்தது. அதன்பிறகு பாலசந்தர் இயக்கிய 'புன்னகை மன்னன்' படத்தில் முழுவதுமாக பிரிந்தது இந்த இணை.
அதன்பிறகு வைரமுத்துவுக்கு சில ஆண்டுகள் பாடல் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இடையில் பல இசை அமைப்பாளர்களை இயக்குநர்களிடம் அறிமுகம் செய்துவைத்தார் அவர். அவர்களில் ஒருவர்தான் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் வருகைக்கு பிறகு வைரமுத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். இதனால் இளையராஜாவுக்கு படவாய்ப்புகள் குறைந்துவிட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.