திருச்சி: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்த 'விடுதலை 2' இன்று (டிச.20) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இன்று திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி, விடுதலை 2 திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கிற்கு ரசிகர்களுடன் படம் பார்க்க வருகை தந்தார்.
திரையரங்கில் நடிகர் சூரிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சூரி, “விடுதலை முதல் பாகத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, அந்தப் படத்தை கொண்டாடினர். அதேபோல ’விடுதலை 2’ படத்தையும் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.
விடுதலை 2 படத்தில் கமர்ஷியல் விஷயங்களை தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இந்த படத்தில் இருக்கிறது. விடுதலை 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என தெரிவித்தார். மேலும் சினிமா ரசிகர்கள் அனைவரும் விடுதலை 2 படத்தை பார்க்க வேண்டும் எனவும், இந்த படத்திற்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, விடுதலை 3 எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அடுத்து நடிக்கும் படங்கள் குறித்து பேசுகையில், “அடுத்தடுத்த படங்களில் கதையின் நாயகனாகவே பயணிப்பேன். விடுதலை 2 படத்தில் வாத்தியார் யார் என்பது குறித்து விரிவாக இருக்கும். இப்படம் அனைவரின் வாழ்வோடு ஒன்றிணையக் கூடியதாக இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளி வருபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு வலி மிகுந்த உணர்வைத் தரும். அடுத்து ’மாமன்’ என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறேன் அந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் தான் நடந்து வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: வலிமையான வசனங்கள், பயங்கரமான நடிப்பு... பாராட்டைப் பெறும் ’விடுதலை 2’! - VIDUTHALAI 2 REVIEW
மேலும் பேசுகையில், “நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன். யார் அதில் ஹீரோ என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு எப்பொழுதும் ஹீரோ என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் தான்” என்றார். இதனைத்தொடர்ந்து சூரியிடம் அரசியலுக்கு வருவீர்களா என்கிற கேள்விக்கு, ”இதுவே (திரைத்துறையே) நன்றாக தான் இருக்கிறது. சினிமாவிலேயே பயணிப்போம் என்றார்” என தெரிவித்தார்.