சென்னை: சீனாவில் ’பாகுபலி 2’ திரைப்பட வசூலை ’மகாராஜா’ திரைப்படம் முறியடித்துள்ளது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து அவரது 50வது திரைப்படமாக கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மகாராஜா'. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், அபிராமி, முனிஷ்காந்த், நட்டி, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
'மகாராஜா' திரையரங்குகளில் வெளியானது முதல் அனைவரது பாராட்டையும் பெற்றது. சாதாரண பழி வாங்கும் கதையை நான் லீனியர் (Non linear) முறை திரைக்கதையுடன் விறுவிறுப்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் பாராட்டை பெற்றார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மகாராஜா அதிக பார்வையாளர்கள் பார்த்த இந்திய படங்கள் வரிசையில் முதல் இடம் பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மகாராஜா திரைப்படம் வெளியானது. சீனாவில் வெளியாகி கிட்டதட்ட ஒரு மாதம் ஆன நிலையில், பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி மகாராஜா திரைப்படம் இதுவரை 85.75 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் சீனாவில் ’பாகுபலி 2’ திரைப்படத்தின் வாழ்நாள் வசூலான 80.50 கோடியை முறியடித்துள்ளது.
விரைவில் மகாராஜா திரைப்படம் சீனாவில் 100 கோடி வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சீனாவில் 100 கோடி வசூலை பெறும் 9வது திரைப்படம் என்ற சாதனையை படைக்கும். சீனாவில் அதிகபட்சமாக அமீர்கான் நடித்த ’தங்கல்’ திரைப்படம் 1300 கோடி வசூல் செய்துள்ளது.
இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை திக்குமுக்காட வைத்த சர்ச்சைகள் ரீவைண்டு! - 2024 TAMIL CINEMA CONTROVERSIES
மேலும் மகாராஜா திரைப்படம் உலக அளவில் தற்போது 200 கோடி வசூலை நெருங்கியுள்ளது. மகாராஜா படக்குழுவே எதிர்பார்க்காத வகையில் உலக அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை தகர்த்து எறிந்து வருகிறது. இந்நிலையில் மகாராஜா திரைப்படத்தை ஜப்பான் நாட்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.