சென்னை:நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகவும் நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருந்த முண்டாசுப்பட்டி திரைப்படம், மூட நம்பிக்கைக்கு எதிராக நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விஷ்ணு விஷாலின் திரைப் பயணத்தில் ஒரு வெற்றிப் படமாகவும் முண்டாசுப்பட்டி அமைந்தது எனலாம்.
அதனைத் தொடர்ந்து, இந்த கூட்டணி ராட்சசன் படத்தில் மீண்டும் இணைந்தது. இந்த முறை த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட அந்த படம், இதுவரை வந்த த்ரில்லர் படங்களில் மிக முக்கியமான படமாக மாறியது. ரசிகர்களின் பேராதரவுடன் இன்று வரையிலும் பேசப்படும் படமாக உள்ளது, ராட்சசன். ஜிப்ரானின் இசை படத்தின் வெற்றிக்கு மேலும் உதவியது எனலாம். விஷ்ணு விஷால் திரை வாழ்வில் மிக முக்கியமான படமாக அந்தப் படமும் அமைந்தது.
தற்போது மூன்றாவது முறையாக இயக்குநர் ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. அதாவது, விஷ்ணு விஷாலின் 21வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது கொடைக்கானலில் மூன்றாவது கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால், அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.