சென்னை: இயற்கையின் பரிணாம வளர்ச்சியில்தான் மனித குலம் உருவாகியது. மனித குலத்தின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றைக் கடந்து அதிகமாக மனித குலத்தை ஆக்கிரமிக்கும் உணர்வென்பது காதல்தான். மனித குலமானது எல்லா காலகட்டங்களிலும் பல்வேறு காதல் கதைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. அந்த கதைகளெல்லாம் நிஜ வாழ்வில் நடந்தவற்றின் பிரதிபலிப்பாகவே உள்ளது.
மனித குலம் தொடர்ந்து சொல்லும் அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ- ஜுலியட் என காவிய காதல் கதைகள் அனைத்தும் நிறைவேறாத காதல் கதைகளாகவே இருக்கின்றன. மதம், ஜாதி, வர்க்கம், இனம் ஆகிய பிரிவினை சக்திகள், வறட்டு கௌரவம், சூழ்நிலைகள் என பலவும் காதலை நிறைவேற விடாமல் தடுக்கின்றன.
ஆனால் அத்தகைய காதலை இத்தகைய சக்திகளால் அழிக்க முடிவதில்லை. அதனாலேயே அவை காவிய காதல் கதைகளாக மாறி விருகின்ற. அத்தகைய நிறைவேறா காதல் திரைப்படங்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
இயற்கை
2003ஆம் ஆண்டு வெளியான ’இயற்கை’ திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் கதைகளில் ஒன்று. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முதல் திரைப்படம் ’இயற்கை’. காதலனுக்காக பல வருடங்கள் காத்திருக்கும் நாயகி , அவள் மீது காதல் கொள்ளும் நாயகன், இதற்கிடையில் திடீரென திரும்பி வரும் அவளது காதலன் என முக்கோண காதல் கதையாக இருந்தாலும் அத்தனை கவித்துவமாக கட்டமைத்திருப்பார் ஜனநாதன்.
கடற்கரை கிராமத்தில் நடக்கும் இக்கதையில் அத்தனை மனிதர்களும் அவ்வளவு இயல்பாய் நம்மிடையே உரையாடுவார்கள். சூழ்நிலைகள்தான் இந்த கதையில் வில்லனாக இருக்கும். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இன்றளவும் நினைவுகூர்ந்து மருது கதாபாத்திரத்தின் வலியை பகிர்ந்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள்.
ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா, பசுபதி என அனைவரும் படத்தின் தூணாக நடித்திருப்பார்கள். மிக கனமான காதல் கதையான ’இயற்கை’ உலகின் தலைசிறந்த இலக்கியமான ’வெண்ணிற இரவுகள்’ எனும் குறுநாவலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டது.
7ஜி ரெயின்போ காலனி
2004ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ’7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம், தமிழ் சினிமாவின் அனைத்து காலங்களிலும் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம். மிகச்சாதரண தோல்வியுற்ற நாயகனை காதலிக்கும் நாயகியும் காதலால் நாயகன் அடையும் முன்னேற்றமும் என மிக யதார்த்த காதல் கதையை உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கும் திரைப்படம் இது.
படம் முழுக்க உணர்வுகளால் நிரப்பப்பட்டிருக்கும் காட்சிகள் ஏராளாம். கிளைமாக்ஸை ஒட்டிய காட்சிகள் எக்காலத்திலும் எளிதில் மறக்க இயலாதவை. அனிதா, கதிரின் காதலை வர்க்கமும், இனமும் சேர்ந்து பிரிக்கின்றன. யுவன்ஷங்கர் ராஜா இசை நம்மை கட்டிப்போடும் வகையில் அமைந்திருக்கும். இன்றளவும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
காதல்
2004ஆம் ஆண்டின் மற்றொரு காவியக் காதல் கதை. படத்தின் பெயரே ’காதல்’. இரு வேறு சாதியைச் சேர்ந்த முருகனும் ஐஸ்வர்யாவும் காதலிக்கிறார்கள். சாதியும் வெறியும் மனிதர்களும் இந்த காதலை என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை. மிக மிக எதர்த்தமான கதாபாத்திரங்களும் எதர்த்தமான முடிவும்தான் படத்தை இன்னும் கனமாக்குகிறது. காதலை கைக்கொள்ள முருகனும் ஐஸ்வர்யாவும் மேற்கொள்ளும் பயணம் உண்மையில் பதைபதைக்க வைக்கும். பரத், சந்தியா இருவரது நடிப்பும் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் அழகாக கையாளப்பட்டிருக்கும்.
பூ
தமிழ் சினிமாவில் ஆண்களின் கண்ணோட்டத்திலேயே அதிகம் பதிவு செய்யப்ப்பட்ட காதல் கதைகளுக்கு மத்தியில் முழுக்க முழுக்க பெண்ணின் பார்வையில் பதிவு செய்யப்பட்ட காதல் கதை. சிவகாசி, ராஜபாளையம் என கந்தக பூமியின் காதல் கதையாக ’பூ’ மலர்ந்திருக்கும். 2008ஆம் ஆண்டு வெளியான ’பூ’ திரைப்படமானது சிறு வயதில் இருந்து காதலிக்கும் ஒருவனுக்காக காதலையே விட்டுக்கொடுக்கும் மாரியின் கதை அத்தனை உணர்வூப்பூர்வமாக அமைந்திருக்கும்.
தமிழ் சினிமாவில் மென்மையான கதைகளுக்கு சொந்தக்காரர் சசி இந்த படத்தை இயக்கியிருப்பார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் சிறுகதையை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதையில் மாரியாக வாழ்ந்திருப்பார் பார்வதி. மாரிக்கும் பனைமரத்திற்கும் இடையேயான அன்பு என அவ்வளவு அழகான காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
பொக்கிஷம்
2009ஆம் ஆண்டு வெளியான ’பொக்கிஷம்’ திரைப்படத்தை இயக்குநர் சேரனே இயக்கி நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளை கொடுத்த சேரனின் மற்றுமொரு அழகிய காதல் படைப்பு. கடிதங்களின் மூலமும் தமிழின் மூலமும் மட்டுமே காதலை பரிமாறிக் கொள்ளும் லெனின், நதிரா.இறுதியில் என்னவானார்கள் என கதை அமைந்திருக்கும்.
மதத்தால் ஏற்பட்ட காதல் பிரிவுக்கு பின்னும் நிறைவேறாத காதலை நினைத்து வாழும் கதை இது. அழகிய தமிழ் வழியே பெண்ணின் காதலையும் இப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள், பத்மப்பிரியாவும் நடிப்பும் நடிகை மீனாவின் குரலும் நதிரா கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கும். அந்த கால கொல்கத்தாவின் அழகும் வசீகரிக்கும்.
மதராசபட்டினம்
இயக்குநர் A.L.விஜய் இயக்கத்தில் ஆர்யா, எமி ஜாக்சன், நாசர் ஆகியோர் நடித்த 'மதராசபட்டினம்', 2010ஆம் ஆண்டு வெளியானது. பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியின்போது இந்தியாவைச் சேர்ந்த பரிதிக்கும் பிரிட்டிஷ் பெண்ணான ஆமிக்கும் இடையே ஏற்படும் காதல் கதைதான் 'மதராசபட்டினம்'. இருவேறு இனத்தைச் சேர்ந்த இருவரின் காதல் கைகூடுவது என்பது அவ்வளவு எளிது இல்லை.
1940கள் காலகட்டத்தின் இந்திய சுதந்திர போரட்டத்தையும் அப்போதைய மெட்ராஸையும் காதல் காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருப்பார் விஜய். கிளைமாக்ஸ் காட்சியில் பரிதியும் ஆமியும் சேர்ந்து வாழ முயற்சிக்கும் போராட்டம் மெய் சிலிர்க்க வைக்கும். தமிழ் சினிமாவின் 'டைட்டானிக்' என்றே இந்த படம் கருதப்படுகிறது.
விண்ணைத் தாண்டி வருவாயா
கௌதம் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. கார்த்திக், ஜெஸ்ஸி எனும் இரு கதாபத்திரங்களுக்கிடையே நிகழும் காதல், மதம், வர்க்கம் என புறச்சிக்கல்கள், அதில்லாத அவர்களின் அகச்சிக்கல்கள் என இந்த காதல் கைகூடுமா என கடைசிவரை கேள்வியுடனே நகர்த்தியிருப்பார்.
'500 Days of Summer' எனும் ஆங்கில படத்தின் பாதிப்பு நிறைய இருந்தாலும் தன்னளவில் தனித்துவமான படமாக மிளிர்கிறது 'விண்ணைத் தாண்டி வருவாயா'. சிம்புவும் த்ரிஷாவும் நிஜ காதலர்களாக வாழ்ந்திருப்பார்கள். இன்றளவும் சென்னையின் ஒரு திரையரங்கில் மட்டும் தினமும் ஒரு காட்சி திரையிடப்பட்டு வருகிறது. அதற்கான பார்வையாளர்களும் குறைந்தபாடில்லை. ஏ.ஆர்.ரகுமானின் இசை இன்னும் உயிர்ப்பித்திருக்கும்.
96
சமீபத்திய காவிய காதல் கதையாக திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட திரைப்படம். 2018ஆம் ஆண்டு வெளியான '96' திரைப்படத்திற்கென தனித்த ரசிகர்கள் இருக்கின்றனர். ராம்-ஜானு இருவரையும் தங்களுடைய கற்பனைகளில் சேர்த்து வைத்த ரசிகர்கள் ஏராளம்.
சூழ்நிலைகளால் இருவருமே தங்களது காதலை பரிமாறிக்கொள்ளாமல் பிரிந்து விடுகின்றனர். நீண்ட வருடங்களுக்குப் பின் சந்திக்கும் ராம், ஜானு ஒரு இரவில் தங்களது காதலை கண்டடைகின்றனர். அதன்பின் என்ன? என்பதே திரைப்படம். விஜய் சேதுபதி, த்ரிஷா என இருவரும் அத்தனை கவித்துவமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள்.