கரூர்: வெங்கட் பிரபு இயக்கத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள 'கோட்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லோரா, அமுதா, திண்ணப்பா, கலையரங்கம் ஆகிய நான்கு திரையரங்குகளில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது.
முதல் நாளான இன்று முதல் காட்சி காலை 10 மணிக்கு திரையிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டு இருந்தது. டிக்கெட்டுகள் ஆன்லைனில் திறக்கப்பட்டதும் ஒட்டுமொத்த டிக்கெட்களும் விற்பனையானதாக திரையரங்க நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் டிக்கெட்கள் அனைத்தும், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவருமான மதியழகன் தலைமையில், ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, ரூபாய் 500 வரை பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட்ட டிக்கெட்கள் அனைத்திலும் விலை ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு உரிய ஆதாரத்துடன் வாட்ஸப் மூலம் அனுப்பியும், தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் நிருபரின் அழைப்பை மாவட்ட ஆட்சியர் ஏற்கவில்லை.
விஜய் தான் பதிலளிக்க வேண்டும்:இதுதொடர்பாக கரூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முல்லையரசு ஈ டிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், "சாமானிய மக்கள் பார்க்கக்கூடிய திரைப்பட டிக்கெட் தொகையான ரூ.130 தொகையை ரூ.300 முதல் 500 வரை விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் விற்பனை செய்யும் அவல நிலை கரூரில் நடைபெற்று வருகிறது. தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து மொத்தமாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெற்று, இதுபோன்று விற்பனை செய்வதால் சாமானிய மக்கள் திரையரங்குக்குள் நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் புதிதாக கட்சி துவங்கி உள்ளார். இந்நிலையில், அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக தனது பட டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வைத்திருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டுவது, ஊழலில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதற்கு சமமாகும். இளைஞர்களை ஊழல் செய்ய ஊக்குவிப்பது சரிதானா என்ற கேள்விக்கு நடிகர் விஜய் பதிலளிக்க வேண்டும்.