ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா (40). இவர் பேராசிரியையாக சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது கணவர் வசந்தகுமாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது இரண்டு மகன்களுடன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (பிப்.9) இரவு லட்சுமி பிரியாவின் வீட்டுக்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்து, நாங்கள் சென்னையைச் சேர்ந்த சிறப்பு போலீசார் என அடையாள அட்டையைக் காண்பித்து, தங்களது வீட்டைச் சோதனையிட வேண்டும் எனக் கூறி அவரது வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனையிட்டுள்ளனர்.
பின் சோதனை செய்து முடித்த பிறகு லட்சுமி பிரியா வீட்டில் இருந்த பொருட்களைச் சரி பார்த்ததில் லேப்டாப், செல்போன், தங்கம் மற்றும் ரொக்கம் திருடு போகியுள்ளதைக் கண்டறிந்துள்ளார். பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி பிரியா ஆற்காடு டவுன் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்போது நேற்று நள்ளிரவில் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் சந்தேகப்படும்படியாக வந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து, விசாரித்ததில் வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த ராஜசேகர் (41) எனத் தெரியவந்தது.
![கைது செய்யப்பட்டவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23510703_handcuff.jpg)
மேலும், இவர்தான் பேராசிரியை லட்சுமி பிரியா வீட்டில் சிறப்பு போலீசார் எனப் போலியாகச் சோதனையிடச் சென்றவர் எனவும் தெரிய வந்த நிலையில் போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், லட்சுமி பிரியா வீட்டிற்கு சோதனை என்ற பெயரில் சென்றது வேலூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (29), காதர் (20), ஜெகன் (20), வேலூர் கீழ அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார்( 27), திருவண்ணாமலை மாவட்டம் தச்சூரை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பது தெரிய வந்துள்ளது. பின், இந்த 6 பேரையும் போலீசார் கைது செய்து, ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருமண மண்டபத்தை குறிவைத்து மொய் பணம், தங்க நகை அபேஸ்!.. பலே கில்லாடி சிக்கியது எப்படி? -
இதையடுத்து அவர்களிடம் இருந்து லட்சுமி பிரியா வீட்டில் இருந்து திருடப்பட்ட ஒரு லேப்டாப், செல்போன், 3 கிராம் தங்கம் என ரூ.3,55,000 மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போலியான போலீஸ் அடையாள அட்டைகளையும், கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்த நிலையில் லட்சுமி பிரியா தனியாக வசிப்பதை அறிந்து, இந்த கும்பல் இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் ஆற்காடு டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.