தஞ்சாவூர்: வரும் 23ஆம் தேதி கும்பகோணம் தாராசுரம் புறவழிச்சாலை வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு சமய, சமுதாய பெரியவர்கள், தலைவர்கள் பங்கேற்கவுள்ள சோழ மண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான கால்கோள் விழா நேற்று தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ம க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அனைத்து சமய, சமுதாயத்தினருக்கும் இடையே ஒற்றுமை வலுக்கவும், நீடிக்க வேண்டும், அவர்களுக்குரிய மக்கள்தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இம்மாநாட்டின் நோக்கமாகும். இம்மாநாடு சிறப்பாக அமைய, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையிலான நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, “வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலில் பாமக நிச்சயமாக கூட்டணி அமைத்தே போட்டியிடும். அது எப்படிபட்ட கூட்டணி, யாருடன் கூட்டணி என்பதை, தேர்தல் சமயத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து முடிவு செய்து அறிவிப்பார்கள். அது குறித்து இப்போது ஆரூடம் கூற முடியாது என கூறினார்.
இதனைத் தொடர்ந்து வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி அளித்த பேட்டியில், ”நாங்கள் கூட்டணிக்காக அலைபவர்கள் அல்ல, மக்கள் நல விரும்பிகள், வன்னியர்களும் வாழ வேண்டும், மற்றவர்களும் வாழ வேண்டும் என யார் நினைக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி. பெரிய நடிகர்கள், பெரிய செல்வாக்கு படைத்தோர் என்பதற்காக அவர்களுடன் எல்லாம் கூட்டணி இருக்காது.
இதையும் படிங்க: 62 நாட்களில் ரூ.61 லட்சம்! நிறைவடைந்த சுவாமிமலை உண்டியல் எண்ணும் பணிகள்.. - SWAMIMALAI HUNDIAL COLLECTION
காரணம் டெல்லியில் யார் பெரிய ஆள் என எண்ணியிருந்தோமோ, அவரே இன்று தோல்வி அடைந்து விட்டார். அது போல நாங்கள் தோற்க விரும்பவில்லை. எல்லா சாதியினருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த மாநாட்டின் நோக்கம்” என்றும் பு.தா.அருள்மொழி கூறினார்.