சென்னை: விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி கடந்த 2005ஆம் ஆண்டு விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’சுக்ரன்’ திரைப்படம் மூலம் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ’நான் அவன் இல்லை’, ’நினைத்தாலே இனிக்கும்’, ’வேட்டைக்காரன்’, ’உத்தமபுத்திரன்’, ’வேலாயுதம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் ’காதலில் விழுந்தேன்’ படத்தில் இடம்பெற்ற ’நாக்க மூக்கா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி 2012இல் வெளியான ’நான்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ’சலீம்’, ’பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ’இந்தியா பாகிஸ்தான்’, ’அண்ணாதுரை’, ’காளி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிச்சைக்காரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மெகா ஹிட்டானது. இந்நிலையில் விஜய் ஆண்டனி சமீப காலமாக அவ்வப்போது இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
கடைசியாக விஜய் ஆண்டனி சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, புத்தாண்டை முன்னதாக வரவேற்கும் விதமாக இன்று (டிச.28) சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி 'விஜய் ஆண்டனி 3.0' நடத்த திட்டமிட்டிருந்தார். இன்று மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இசை கச்சேரி நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.