ஈரோடு: பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் பெயரை அவர்களின் ஞாபகமாக திரைப்படங்களில் என்னுடைய பெயராக வைத்துக்கொண்டேன். பாடம் கற்பித்துக் கொடுத்த ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது முக்கியம் என திரைப்பட நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று(டிசம்பர் 28) சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இதில், பள்ளி தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை பாக்யராஜ் வழங்கியுள்ளார்.
பின்னர், நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேசியதாவது, “படித்த பள்ளிக்கும், கற்பித்த ஆசிரியருக்கும் பெயர் வாங்கிக் கொடுப்பது முக்கியமானது. என்னுடைய படத்தில் என் பெயர் சண்முகமணி என வைத்திருப்பேன் (‘சுந்தரகாண்டம்’ படத்தில், நடித்த வாத்தியார் கேரக்டருக்கு ‘சண்முகமணி’ என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது). சாதாரணமாக நான் அந்த பெயரை வைக்கவில்லை.
இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ், சல்மான் கான் கூட்டணியில் உருவான 'சிக்கந்தர்' மிரட்டல் டீசர் வெளியீடு!
எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் பெயர் சண்முகமணி. அவரின் ஞாபகார்த்தமாக படத்தில் அவரது பெயரை சண்முகமணி என நான் வைத்துக் கொண்டேன். நான் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை ஆசிரியர் சண்முகமணி கற்றுக் கொடுத்தார். சண்முகமணி மாஸ்டருடன் இன்றும் நான் அவருடன் தொடர்பில் உள்ளேன்.
அவரது பிள்ளைகள் என்னை தொடர்பு கொண்டு, ஆசிரியர் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்து கூறி வீடியோ பதிவு செய்து அனுப்பமாறு கோரினர். அதன்படி, நானும் ஆசிரியருக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ அனுப்பினேன். அவர்களை வாழ்த்தும்போது அவர்களின் குடும்பத்தாருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.நமக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் நமது வாழ்வில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அதனால் கடைசி வரைக்கும் நாம் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது முக்கியம்” இவ்வாறு அவர் கூறினார்.