சென்னை: சல்மான் கான் நடித்து வரும் ’சிக்கந்தர்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துவரும் திரைப்படம் ’சிக்கந்தர்’ (Sikandar). இப்படத்தின் டீசர் இன்று (டிச.28) வெளியாகியுள்ளது. ஆக்ஷன் சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் சல்மான் கான், முகமுடி அணிந்து தாக்க வருபவர்களிடம் சண்டையிடுகிறார்.
முன்னதாக சல்மான் கானுக்கு பலமுறை கொலை மிரட்டல் வந்துள்ளது. அதற்கு சூசகமாக பதில் சொல்லும் வகையில் டீசர் அமைந்துள்ளது என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். நேற்று சல்மான் கான் பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று (டிச.27) முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்ததால் இன்று சிக்கந்தர் டீசர் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் சிக்கந்தர் ஆகும். முன்னதாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்த கல்கி 2898AD திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிக்கந்தர் திரைப்படம் அடுத்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம்... மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் பிரபலம்! - SS RAJAMOULI MAHESH BABU
ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் சிக்கந்தர் திரைப்படமும், தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். சிக்கந்தர் திரைப்படம் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கஜினி, துப்பாக்கி போல மாபெரும் வெற்றி பெறும் என சல்மான் கான் ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.