திருப்பூர்: சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்ததே படத்தின் வசூல் பாதிக்க காரணம் எனவும் தயாரிப்பாளர் இதனால் கடும் பாதிப்பை சந்தித்ததாக பரவலான பேச்சு எழுந்த நிலையில், இதுதொடர்பாக திரைப்பட வினியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆடியோ வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
அது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், "தமிழகத்தில் புதிய திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சி காலை 9 மணிக்குத்தான் நடக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அதிகாலை வேளைகளிலேயே ஆரம்பமாகிறது.
திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) இதனால் அங்கு படத்தை பார்த்துவிட்டு தமிழகத்தில் திரையிடுவதற்கு முன்னதாகவே அந்த படத்தை பற்றி ஊடகங்களில் விமர்சனம் என்ற பெயரில் எதிர்மறையாக விமர்சித்து, பல கோடி ரூபாய் போட்டு எடுக்கப்படும் படத்தை காலி செய்கிறார்கள்.
சமீப காலங்களில் இப்படியான விமர்சனங்கள் வரைமுறை இல்லாமல் இருக்கிறது. மேலும், திரையரங்க வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என்ற பெயரில் வீடியோ எடுப்பதை திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது.
இதையும் படிங்க:'கங்குவா' எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலி: 12 நிமிட காட்சிகள் நீக்கம் எனத் தகவல்!
ஆகையால், மற்ற மாநிலங்களிலும் சிறப்புக் காட்சிகளை தமிழகத்தில் ஆரம்பமாகும் நேரமான 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டும். அதேபோல, சினிமா விமர்சனங்களுக்கு நீதிமன்றத்தை அணுகி ஒரு வார காலத்திற்கு யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என தடை வாங்க வேண்டும்.
சமீபத்தில் கேரளாவில் கூட ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தனது படங்களுக்கு விமர்சனம் செய்ய தடை வாங்கியதை கேள்விப்பட்டேன். அதே போல, இங்கு தமிழகத்திலும் தயாரிப்பாளர்கள் சங்கம் நீதிமன்றத்தை அனுகி உத்தரவு பெற வேண்டும்.
இந்த வருடத்தில், இந்தியன் 2 மற்றும் வேட்டையன் போன்ற படங்களும், சமீபத்தில் வெளியான கங்குவா படமும் கடுமையான விமர்சனங்களால்தான் மக்கள் வருவது குறைந்து வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆகையால், படத்தை திருட்டு விசிடி மற்றும் இணையதளங்களில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடையைப் பெறும் தயாரிப்பாளர்கள், புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு குறைந்தது 7 நாட்களுக்காவது விமர்சனம் செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்