சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அத்தொகுதியில் திமுகவே நேரடியாக களம் இறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே எஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மையி்ல் காலமானார். அவர் மறைந்ததையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, கடந்த 2 தினங்களுக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், இத்தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக பிரதான கட்சிகள் எதுவும் தற்போது வரை தங்களின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக அறிவிக்கவில்லை.
இருப்பினும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறிவரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுகவே நேரடியாக களம் காண உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
இதற்கான அறிவிப்பை நாளை (ஜன.11) மாலைக்குள் வெளியிட திமுக திட்டமிட்டிருப்பதாகவும், வேட்பாளராக தேமுதிகவில் இருந்து திமுகவில் ஐக்கியமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளருமான வி.சி. சந்திரகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதனிடையே, அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை காலை நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் நிலைப்பாட்டை பொறுத்து, திமுகவின் நிலைப்பாட்டில் சில மாற்றங்களும் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.