சென்னை: அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ (Once More). ’குட்நைட்’ திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு, 'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நானா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
ஒன்ஸ் மோர் படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ராஜ் கமல் கலை இயக்குநராகவும், நவதேவி ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஒன்ஸ் மோர் படத்தில் ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாடல்களும் டைட்டில் டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. ’இதயம்’ என்ற பாடலை மலையாள இயக்குநர், பாடகர் வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருந்தார்.
தற்போது ’ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் புதிய பாடலாக ’வா கண்ணம்மா’ எனும் பாடல் வீடியோவுடன் இணையத்தில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் மற்றும் உத்தாரா உன்னிகிருஷ்ணன் இருவரும் இந்த பாடலைப் பாடியுள்ளனர். இதுவரை ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்திலிருந்து வெளி வந்திருக்கும் மூன்று பாடல்களையும் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தே எழுதியுள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசரிலேயே இப்பாடலில் ஒரு சிறு பகுதி இடம் பெற்றிருந்தது. அப்போதிருந்தே பலரும் இந்த பாடல் வெளியீட்டை எதிர்பார்த்திருந்தனர்.
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
என இரண்டு திருக்குறள்களுடன் தொடங்கும் பாடலின் வீடியோவில் இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் மற்றும் உத்தாரா உன்னிகிருஷ்ணன் இருவரும் தோன்றி பாடுகின்றனர். கதகளி நடனம், பரதநாட்டியம் என படமாக்கப்பட்டிருக்கும் ப்ரோமோ பகுதி மட்டுமில்லாமல் திரைப்படத்தின் சில காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பொங்கலுக்கு என்னென்ன பார்க்கலாம்... இந்த வார ஓடிடி புது வரவுகள் என்ன?
’ஒன்ஸ் மோர்’ திரைப்படம் காதலர் தின வெளியீடாக பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை அதிதி ஷங்கர் நடிப்பில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'நேசிப்பாயா' திரைப்படம் ஜனவரி14ஆம் தேதி பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.