சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக போட்டியிடுகிறது. முதல்வர் ஸ்டாலின் கேட்டு கொண்டதற்கிணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ' ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடைத்தேர்தல் வரவிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.
— Selvaperunthagai K (@SPK_TNCC) January 10, 2025
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே… pic.twitter.com/4JnjWznTIs
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல்முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.' என்று செல்வப்பெருந்தகை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிட உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. திமுக சார்பில், அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளருமான வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிடுவதாக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.