சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் தவறான தகவல்களை தெரிவிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பு சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் சாதிவாரியாக எத்தனை பேர் உள்ளனர் என்பதற்கு 1931 ஆம் ஆண்டு நடந்த கணகெடுப்புதான் நம்மிடம் உள்ளது. தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் படியல் இனத்தவர், பழங்குயினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எத்தனை பேர் உள்ளனர் என்ற துல்லியமான கணக்கெடுப்பு நம்மிடம் இல்லை.
முதலமைச்சருக்கு மனம் இல்லை: ஆளும் கட்சி சமூகநீதி பற்றி பேசுகிறது. பின்தங்கிய அனைத்து சமுதாய மக்களும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்திற்க்கு நிகராக வளர்ச்சி அடைவதுதான் சமூக நீதியின் அடித்தளமாகும். எந்த சமூகத்தினர் பின் தங்கிய உள்ளனர் என்ற கணக்கு தற்போது எங்கு உள்ளது? மாநில அரசானது கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என பொய் சொல்கிறது. இட ஒதுக்கீடு பெற்ற மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முதலமைச்சருக்கு மனம் இல்லை. சமூகநீதி பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதி சமூகநீதி என வசனம் மட்டும் பேசினால் போதாது,
இந்தியாவில் உள்ள தெலங்கானா,பீகார் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிகிறது. ஆனால், இந்தியாவில்தான் உள்ள தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என கூறுகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 2008ன் படி மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்தலாம். இது ஒரு புள்ளி விவரம் சேகரிக்கும் பணிதான்.
இதையும் படிங்க: டிசம்பருக்குள் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-ஐ தொடும் - வெளியான அதிர்ச்சித் தகவல்!
இதன் மூலம் மலை கிராம மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிய முடியும். மலைவாழ் மக்கள் எங்கே இருக்கிறார்கள், எவ்வளவு பேர் இருக்கிறார்கள், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்,அவர்களில் யாரேனும் படித்திருக்கிறார்களா? அவர்களுக்கு என்ன மாதிரியான வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது? அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளதா? அவர்களை முன்னேற்ற இட ஒதுகீடு மட்டும் போதாது, சமூகம் நலதிட்டங்களும் தேவை.
உண்மைக்கு மாறான தகவல்: பீகார் மாநிலத்தில் கணக்கெடுப்பின் போது 6000 ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறும் 2.25 லட்சம் குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.அவர்களை படிக்க வைத்து வருகிறார்கள் இதற்காகத்தான் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றோம். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, 18 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.ஆனால் மக்கள் தொகையில் அவர்கள் 22 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள்.அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.
பீகாரில் கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்கிறார். பீகாரில் கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் தடை செய்யவில்லை. கணக்கெடுப்புக்குப் பின்னர் இட ஒதுக்கீடு உயர்த்தியதற்குதான் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.
விஜய், ஆதவ் அர்ஜூனாவுடன் பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். இன்று அரசியல் தகவல், தொழில்நுட்பத்துடன் சேர்ந்துள்ளது. கட்சியில் கட்சி நிர்வாகிகளுடன் பேசுவதற்கும் சமூக வலைதளங்களுக்கும் இது போன்ற நிபுணர்களும் தேவைப்படுகிறார்கள்,"என்றார்.