சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் எரிவாயு சிலிண்டர் மாற்றும் போது எரிவாயு கசிந்ததில் நேரிட்ட விபத்தில் மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது 62) கூலித் தொழிலாளி ஆவார். இவரது மனைவி லட்சுமி (57) வீட்டு வேலைகளுக்கு சென்று வருவது வழக்கம். கடந்த செவ்வாய்கிழமை மாலை வீட்டில் எரிவாயு சிலிண்டர் தீர்ந்து விட்டதால், புதிய சிலிண்டரை மாற்றும் பணியில் லட்சுமி ஈடுபட்டிருந்தார்.
புதிய சிலிண்டரை மாற்றும் போது எரிவாயு கசிந்து வீடு முழுவதும் பரவியுள்ளது. அப்போது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் திடீரென தீப்பற்றியது. இதில் லட்சுமி மற்றும் அவரது கணவர் வீரக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பக்கத்து அறையில் இருந்த அவர்களது மருமகன் குணசேகரன் ஓடி வந்து மாமனார், மாமியார் இருவரையும் காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பற்றியதால் அவரும் தீக்காயமுற்றார்.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் நிறுத்தம்!
அதிக அளவு தீக்காயங்கள் இருந்ததால் சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்தடுத்து மூவரும் உயிரிழந்தனர். உயிரிழந்த குணசேகரன், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆனந்தியும் நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
தினமும் இரு சக்கர வாகனத்தில் மனைவி ஆனந்தியை அவரது நிறுவனத்தில் வேலைக்கு விட்டு விட்டு, தன்னுடைய வேலைக்கு செல்வதை குணசேகரன் வழக்கமாக கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் பணி முடிந்ததும் மாமனார் வீட்டுக்கு வந்து காத்திருந்து, மனைவி வந்ததும் அவரையும் அழைத்துச் செல்வது வழக்கம்.
அப்படித் தான் அன்றைக்கு குணசேகரன் மாமனார் வீட்டுக்கு வந்து மனைவியை அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தார். அப்போது தான் எதிர்பாரதவிதமாக எரிவாயு கசிந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் தமது மாமனார், மாமியாரை காப்பாற்ற முயன்று குணசேகரனும் உயிரிழந்தது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குணசேகரன்- ஆனந்தி தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.