திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்படும் கல்லூரியில் காலை, மாலை என இருவேளைகளிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு, அதே கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணிபுரியும் மருதகுளம் பகுதியைச் சேர்ந்த பிரைட் ஜூவட்ஸ் என்பவர் பாலியல் நீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை; தவெக நிர்வாகி போக்சோவில் கைது! |
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருடன் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பேராசிரியர் பிரைட் ஜூவட்ஸ் செல்போன் மூலமாக பேசுவது, இரவில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர் மாணவியிடம் பாலியல்ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மகளிர் காவல் நிலைய போலீசார் தற்காலிக பேராசிரியரை போக்சோவில் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, இதே கல்லூரியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு பேராசிரியர்கள் மாணவி ஒருவரை மது குடிக்க அழைத்ததோடு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் அதே கல்லூரியில் மேலும் ஒரு பேராசிரியர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது மாணவிகள் மற்றும் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.