சென்னை: சென்னை திருவான்மியூர் பகுதியில் இயங்கி வருகிறது கலாஷேத்ரா நடனப் பள்ளி. 1936-ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் ருக்மணிதேவி அருண்டேலினால் இந்த நடனப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி வளர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரி இதுவாகும். ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கலாஷேத்ராவில், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி கலை பயின்று வருகின்றனர். தற்போது மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் ஒரு அங்கமாக விளங்குகிறது கலாஷேத்ரா.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கு பயிலும் மாணவிகள், நான்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை தருவதாகக் கூறி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பேராசிரியர் ஹரி பத்மநாதன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவருக்கு கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கலாஷேத்ரா நடனப் பள்ளியில் கடந்த 1995-2001-ம் ஆண்டு வரை படித்து தற்போது வெளிநாட்டில் உள்ள ஒரு மாணவி, பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அந்த முன்னாள் மாணவி சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இளந்திரையன், இறுதி அறிக்கையை கோப்புக்கு எடுத்து, நான்கு வாரங்களில் விசாரணையை துவங்கும்படி, சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.