சென்னை: நடிகர் பிரதீப் கே விஜயன் (39) தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இவர் தமிழில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான தெகிடி திரைப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது.
அதன்பிறகு இரும்புத் திரை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், டெடி, மேயாத மான் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். பி.டெக் படித்துள்ள இவர், பல படங்களுக்கு சப் டைட்டில் போடும் பணிகளையும் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், சென்னையில் தனியாக வீடு எடுத்து தங்கிவந்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை பாலவாக்கம் சங்கராபுரம் முதல் தெருவில் உள்ள வீட்டில் அவரது அடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பிரதீப் வீட்டின் கதவு இரண்டு நாட்களாக பூட்டியிருந்ததாகவும், அவர் வெளியே வராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது நண்பர்கள் அவருக்கு தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்த நிலையில், அவரிடம் எந்த விதமான பதிலும் கிடைக்காததால், அவர்கள் காவல் துறையை அணுகியுள்ளனர்.
பின்னர், காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் இறந்து கிடந்துள்ளார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரதீப் கே விஜயன் காலமான செய்தி தமிழ்த் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் பயங்கரம்.. அண்ணனுக்குப் போட்ட ஸ்கெட்ச்சில் தம்பி கொடூர கொலை..!