சென்னை: பழம்பெரும் நாடக, சின்னத்திரை நடிகரும், கதாசிரியருமான அடடே மனோகர் நேற்று (பிப்.28) சென்னையில் காலமானார். அடடே மனோகர் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதில் இவரே எழுதி, இயக்கி நடித்த நாடகங்களும் அடங்கும். அவை ஒவ்வொன்றும், 60 முறைக்கும் மேல் மேடையேறி உள்ளன.
மிகப் பெரிய தனியார் நிறுவனத்தில், பொறுப்பான துறையில் பணியாற்றிக் கொண்டே, நாடகத்திலும் நடித்து வந்தார் மனோகர். மேலும், பல தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்களையும் இவர் எழுதி நடித்துள்ளார். அதோடு, ஏராளமான நாடகங்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1980களில் இவர் எழுதி நடித்த தொடரான 'அடடே மனோகர்' தொடர், இவருக்கு இந்தப் பெயரைப் பெற்றுத்தந்தது.
மேலும், பலரையும் இந்தத் தொடர் வாய்விட்டு சிரிக்க வைத்தது எனலாம். மனைவியை இழந்த இவருக்கு 3 குழந்தைகள். சென்னையில் வசித்து வந்த மனோகர், ஓரளவுக்கு ராகங்களைப் கண்டுபிடித்து பாடுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், ஓவியத்திலும் ஆர்வம் கொண்ட இவருக்கு, ஓரளவு வரையவும் தெரியுமாம்.