சென்னை: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படத்தின் புரொமோஷனுக்கு நடிகர், நடிகைகள் வருவது குறைந்துள்ளதாகவும், நடிகர்கள் தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற அதிருப்தி குரலும் ஓங்கி ஒலித்து வருகின்றது.
கோலிவுட்டில் உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் ஆரம்பத்தில் இருந்தே எந்தவித பட புரமோஷனுக்கும் வருவதில்லை. அதேபோல் நயன்தாராவும் அவர் நடித்த படத்தின் புரொமோஷனுக்கு வருவதை குறைத்துக் கொண்டார். ஆனால் சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, 'நான் எந்த படத்திற்கும் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை, ஆனால் விஷ்ணுவர்தன் எனது நண்பர்; அவரது அழைப்பை மறுக்க முடியவில்லை' என்றார்.
இந்நிலையில், தற்போது வளர்ந்துவரும் நடிகர், நடிகைகளும் புரொமோஷனுக்கு வருவதில்லை என்ற முடிவில் உள்ளதாக அதிருப்தி குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன. சமீபகாலமாக இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரிதாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு அப்படத்தின் ஹீரோ அசோக் செல்வன் வரவில்லை.
இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் திருமலை மேடையிலேயே தனது ஆதங்கத்தை காட்டமாக வெளிப்படுத்தினார். அதேபோல் நேற்று நடைபெற்ற 'நாற்கரப்போர்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், அப்படத்தின் நாயகி அபர்ணதி கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, "புரொமோஷனுக்கு நாயகி அபர்ணதி தனியாக 3 லட்சம் ரூபாய் கேட்டார்" என்று மேடையிலேயே கூறினார்.
மேலும், "மேடையில் தன்னுடன் எந்த நடிகைகள் அமர வேண்டும் என்று நிபந்தனையிட்டார். இப்படி வளர்ந்து வரும் நடிகர்கள் ஏதோ தன்னால் தான் படம் ஓடுவது போல் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். தமிழ் சினிமா தற்போதுள்ள சூழலில் நடிகர்களின் இந்த செயல் அவர்களுக்கே ஆபத்தாக சென்று முடிய வாய்ப்புள்ளது" என்று சுரேஷ் காமாட்சி எச்சரித்தார்.