சென்னை: இந்த ஆண்டு வெளியான வாழை, ஜமா, கொட்டுக்காளி, லப்பர் பந்து போன்ற படங்களுக்கு கிடைத்த வெற்றியின் மூலம் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையை நோக்கி நகர்வதை பார்க்க முடிகிறது. முன்னதாக மலையாளத்தில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொண்டு சிறிய பட்ஜெட்டில் வெளியாகும் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் அதிக வரவேற்பு அளிக்கின்றனர் எனவும், தமிழ் சினிமாவில் அவ்வாறு வெளியாகும் படங்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கபட்டது.
அதற்கு மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற படங்களுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பு உதாரணமாக கூறப்பட்டது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்படுகின்ற படங்கள் நன்றாக இருந்தாலும், மக்கள் திரையரங்குகளில் வந்து பார்க்க தயங்குகின்றனர் என்பது பல ஆண்டுகளாக நிலவும் கருத்தாகும். அந்த கருத்தை சமீபத்தில் வெளியான வாழை, லப்பர் பந்து ஆகிய படங்கள் பொய்யாக்கியுள்ளது.
இப்படங்களில் வெற்றியின் மூலம் படத்தின் கதை அல்லது திரைக்கதை நன்றாக இருக்கும் பட்சத்தில் ஆடியன்ஸ் தியேட்டரில் சென்று பார்க்க யோசிப்பதில்லை என்பது நிருபணமாகியுள்ளது. லப்பர் பந்து திரைப்படம் எடுக்கப்பட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்துள்ளது. அதேபோல் வாழை திரைப்படம் படக்குழு எதிர்பார்க்காத அளவு பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது. இந்த மாற்றம் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்கள் மட்டுமல்லாது பல யதார்த்த சினிமாக்கள் இயக்க இளம் இயக்குநர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
கொட்டுக்காளி, ஜமா போன்ற படங்கள் வசூல் ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சாமானிய பார்வையாளர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துமா என்பது குறித்து பிரபல சினிமா வல்லுநர் ஸ்ரீதர் பிள்ளையிடம் ஈடிவி பாரத் செய்தியாளர் பேசியபோது, “எப்போதும் ஒரு படம் வெற்றி பெறுவதற்கு கதை தான் முக்கிய காரணம்.