ஹைதராபாத்: நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் நேற்று (டிச.04) கோலாகலமாக நடைபெற்றது. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நேற்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மணப்பெண் சோபிதா காஞ்சிவரம் புடவையில் தோன்றினார். அதேபோல் மணமகன் நாக சைதன்யா பஞ்சகச்ச உடையில் தோன்றினார். இதனைத்தொடர்ந்து திருமணத்தில் நாக சைதன்யா தாலி கட்டிய பிறகு சோபிதா எமோஷனலாகி ஆனந்த கண்ணீர் சிந்தினார். இரவு 8 மணிக்கு தொடங்கிய திருமண நிகழ்வு, 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த திருமண நிகழ்வு குறித்து நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சைதன்யா மற்றும் சோபிதா ஆகியோர் இந்த அழகான அத்தியாயத்தை தொடங்கியுள்ளது உணர்ச்சிகரமான தருணம்.
இதையும் படிங்க: 'புஷ்பா 2' டிக்கெட் முன்பதிவிலேயே 100 கோடி; முதல் நாள் வசூலில் வரலாறு படைக்குமா?
சைதன்யாவிற்கு வாழ்த்துக்கள், சோபிதாவை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறேன். அக்கினேனி நாகேஸ்வர ராவ் (ANR) சிலை முன்பு இந்த கொண்டாட்டம் நடைபெற்றது, மேலும் இந்த நிகழ்வை சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார். முன்னதாக நாக சைதன்யாவிற்கும், நடிகை சமந்தாவிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்று, 2021ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.