திருச்சி: திருச்சியில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தான் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மேல்நிலைப் பள்ளியில் 90வது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் ’பராசக்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரும் கலந்து கொண்டார்.
விழா மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், "கேம்பியன் பள்ளிக்கு வருவது தனக்கு பெருமை என்றும், அங்கு தான் படித்த போது இருந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து பெயர் சொல்லி அழைத்து பாராட்டினார். பின்னர் 2035இல் பத்து ஆண்டுகள் கழித்து பள்ளியின் நூறாவது ஆண்டு விழாவிலும் தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
மேலும் சிவகார்த்திகேயன் பேசுகையில், எனது மகளை அழைத்து வந்து இந்த பள்ளியை சுற்றி காண்பித்துள்ளேன், வரும் காலங்களில் எனது குழந்தைகளை அழைத்து வந்து கேம்பியன் பள்ளியை காண்பிக்க உள்ளதாக கூறினார். இதனிடையே சிவகார்த்திகேயன் பேசிக் கொண்டிருக்கும் போதே வள்ளுவன் என்கிற ஆசிரியர் கூட்டத்திலிருந்து எழுந்து நடந்து சென்றார். அவரை கவனித்த சிவகார்த்திகேயன், "சார் நீங்க பாடம் நடத்தும் போது நான் இப்படி பாதியில் எழுந்து வெளியே போயிருக்கேனா? நான் பேசுவது பிடிக்கவில்லையா, இப்படி எழுந்து போகிறீர்களே என மேடையிலேயே அவரை கலாயித்தார்.
இதனையடுத்து ஆசிரியர் வள்ளுவன் மீண்டும் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார். இதனால் விழா அரங்கே கலகலப்பாக ஆனது. பின்னர் பேசிய சிவகார்த்திகேயன், நான் படிப்பில் சுமார் தான் என்றும், கணக்கு பாடத்தில் மிகக் குறைந்த மதிப்பெண்களை எடுத்து இருந்தேன் எனவும் கூறினார். இந்த பள்ளியில் சீட் கிடைப்பதற்கு நுழைவுத் தேர்வு வைப்பார்கள், நான் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் எனக்கு இந்த பள்ளியில் கிடைக்கவில்லை எனவும், எனது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு இந்த பள்ளியில் சீட் வாங்கி கொடுத்தார்” எனவும் கூறினார்.
இதையும் படிங்க: "அஜித்திற்கு முதல் கால் விஜய்யிடம் இருந்து தான் வந்தது"... மனம் திறந்த சுரேஷ் சந்திரா! - AJITH VIJAY CONTROVERSY
கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், “நானும் பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தேன். ஆனால் பள்ளி படிக்கும் காலத்தில் கலை நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொண்டதில்லை, கல்லூரி சென்ற பின்னரே நான் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன், ஆனால் இந்த பள்ளியில் ஆசிரியை ஒரு முறை என்னை ஆங்கில நாடகத்தில் கலந்து கொள்ள வைத்தார். அதில் நான் பெண் வேடமிட்டேன், ’ரெமோ’ படத்திற்கு முன்பு நான் பெண் வேடமிட்டு இந்தப் பள்ளியில் தான் நடித்தேன்” என தன் பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.