சென்னை: ஆவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ’மெய்’ சர்வதேச குறும்பட விழா நடைபெற்றது. இந்த குறும்பட விழாவில் தமிழ்,இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குறும்படங்களை கல்லூரி மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் படைப்பில் தொலைந்த புன்னகை, பாஸ், புதிய தொடக்கம், ரணம், அறிவு, சூப்பர் ஹீரோ, நேர்காணல், அதிகாரம், நீங்காத ரீங்காரம், கயமை, கரூ, வினை, கதிரவன், துணை, நான்காவது சுவர், கொரோனா, பிரேதம், 1ஆம் தேதி, வறுமையிலும் நேர்மை, நான் யார், பிளான்-பி ஆகிய குறும்படங்கள் விருந்தினர்களின் சிந்தனைகளுக்கு சவால் விடும் வகையில் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கல்லூரி மாணவர்கள் இயக்கி காட்சிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் ராஜேஷ், இயக்குநர் சுசீந்திரன், பொன்ராம், செழியன் நடிகர்கள் அப்புக்குட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறந்த குறும்படங்களை தேர்வு செய்தனர். இந்த விழாவில் சிறந்த மூன்று குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் முதல் பரிசாக 1 லட்சம், 2ஆம் பரிசாக 50 ஆயிரம், 3ஆம் பரிசாக 30 ஆயிரம் என ரொக்கப் பணம், சான்றிதழ் மற்றும் பரிசுகோப்பைகள் வழங்கி சிறப்பித்தனர்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பிரபல இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “பராசக்தி படக்குழுவினர், ஏற்கனவே வெளிவந்த பராசக்தி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் முறையாக அனுமதி வாங்கி இருக்க வேண்டும் அவ்வாறு வாங்கி இருந்தால் பிரச்சனை இல்லை. திரைப்படங்களுக்கு தலைப்பு பற்றாக்குறை என்பது இல்லை, கதைக்கு ஏற்றார் போல் பொருத்தமான பெயரை சூட்ட நினைக்கும் போது, தேர்வாகும் பெயர் கதைக்கு கச்சிதமாக அமைகிறது. அது பழைய பெயரோ, புதிய பெயரோ கதைக்களத்திற்கு பொருத்தமாக அமையும் பெயர் தான் சூட்டப்படுகின்றது, வேறு எந்த காரணமும் இல்லை” என கூறினார்.
இதையும் படிங்க: நாடகத்தில் போட்ட பெண் வேடம், ஆசிரியர் போல மிமிக்ரி… சிவகார்த்திகேயன் படித்த பள்ளியில் கலகல பேச்சு! - SIVAKARTHIKEYAN
தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் பராசக்தி தலைப்பு சர்ச்சை குறித்து பேசுகையில், ”முடிந்தவரை புதிய பெயர்களை திரைப்படத்திற்கு சூட்டினால் எந்த பிரச்சனையும் இல்லை, சொந்தமாக பெயர் வைக்க வேண்டும். பெயர்களை புதிதாக படைக்க வேண்டும். திரைப்படம் ஹிட் ஆக வேண்டும் என்று தான் பழைய திரைப்படத்தின் பெயர்களை வைக்கின்றனர். மேலும் படத்தை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடிவதால் பழைய பெயரை வைக்கின்றனர். பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும் என்றால் புதிய பெயர்களை வைப்பது நல்லது” என்றார்.