ஐதராபாத் : பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே, தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். நடிகை அனுஷ்கா நடித்து வெளியாகி வசூல் சாதனை படைத்த அருந்ததீ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.
மேலும், நடிகர் விஜயின் வேட்டைக்காரன், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான வெடி உள்ளிட்ட பல்வேறு படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான கில்லர் சூப் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் 90 சதவீதம் கொண்ட அடைப்பு இருப்பதை கண்டிறிந்தனர். இதையடுத்து உடனடியாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடிகர் சாயாஜி ஷிண்டே உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.