சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, மைசூர், சிங்கப்பூர் ஆகிய பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமான பயண கட்டணங்களின் விலை 5 மடங்கு வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஜனவரி 1, 2025ல் ஆங்கிலப் புத்தாண்டு வருகிறது. இதற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசிப்பவர்கள், தொழில் செய்பவர்கள் என பலரும் தங்களுடைய சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
விமான கட்டணம் உயர்வு:
அதன்படி, ரயில்களிலும், ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்கள் காலியாகி விட்டதாலும், விமானங்களில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இதனால், தற்போது சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களின் பயண கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அலைமோதும் மக்கள் கூட்டம்:
அதன்படி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களான தூத்துக்குடி, மதுரை, கோவை மற்றும் திருவனந்தபுரம் கொச்சி செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. மேலும், சுற்றுலா தளங்களான மைசூர், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை - கன்னியாகுமரி பண்டிகை கால சிறப்பு ரயில் -நாளை முன்பதிவு தொடக்கம்!
இந்த நிலையில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு காரணமாக, விமான டிக்கெட்டுகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளன.
பயணம் | வழக்கமான கட்டணம் | உயர்வு கட்டணம் |
சென்னை - தூத்துக்குடி | ரூ.4,796 | ரூ.14,281 |
சென்னை - மதுரை | ரூ.4,300 | ரூ.17,695 |
சென்னை - திருச்சி | ரூ.2,382 | ரூ.14,387 |
சென்னை - கோவை | ரூ.3,485 | ரூ.9,418 |
சென்னை - சேலம் | ரூ.3,537 | ரூ.8,007 |
சென்னை - திருவனந்தபுரம் | ரூ.3,821 | ரூ.13,306 |
சென்னை - கொச்சி | ரூ.3,678 | ரூ.18,377 |
சென்னை - மைசூர் | ரூ.3,432 | ரூ.9,872 |
சென்னை - கோலாலம்பூர் | ரூ.11,016 | ரூ.33,903 |
சென்னை - சிங்கப்பூர் | ரூ.7,510 | ரூ.16,861 |
சென்னை - தாய்லாந்து | ரூ.8,891 | ரூ.17,437 |
சென்னை - துபாய் | ரூ.12,871 | ரூ.26,752 |
இதுகுறித்து விமான நிலை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது “இது வழக்கமாக தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்களில் அதிகப்படியான பயணிகள், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதால் விமான கட்டணங்கள் கூடுதலாக உயர்த்தப்படும். பண்டிகை நாட்கள் முடிந்த பின்பு விமான கட்டணங்கள் பழைய கட்டணங்களுக்கு திரும்பிவிடும். இவை அனைத்தும் அந்தந்த விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ள கட்டணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் தற்போது 4 மடங்கு, 5 மடங்கு என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.