சென்னை: தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிதுவரை 31 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரியையர்களுக்கு ரூ.3.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை
சென்னை மயிலாப்பூர் சிஐடி காலணியில் உள்ள கனிமொழி இல்லத்தில் ராஜாத்தி அம்மாளிடம் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கருணாநிதி அவர்களின் நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டதற்கு தாயாளு அம்மாள், ராசத்தி அம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் எழுத்தாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கலைஞர் தனது 23-ஆம் வயதில் இராஜகுமாரி திரைப்படத்திற்கு முதன்முதலாக வசனம் எழுதினார். முதன்முதலில் "முரசொலி" என்னும் துண்டு இதழ் வெளியீட்டை 1942-ஆம் ஆண்டு வெளியிட்டார். கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. 'நெஞ்சுக்கு நீதி' என்னும் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
கடந்த 1957 முதல் 2018-ஆம் ஆண்டு வரை கலைஞர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தனியொரு மனிதரால் அவரது வாழ்நாள் காலத்தில் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்தவர் கலைஞர்.
எண்பதாண்டு காலம் பொது வாழ்வு, ஐந்துமுறை முதலமைச்சராக மக்கள் பணி மட்டுமல்லாமல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்கள். இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்." என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
சான்றோர்களின் நூல்கள் தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை. சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 188 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 15.32 கோடி நூலுரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மட்டும் 139 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு 9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.