சென்னை: நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியை கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டும், 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் சென்னை மூன்றாவது குடும்பநல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்த போது, ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். அப்போது நீதிபதி இருவருக்கு இடையான பிரச்சனை தொடர்பாக குடும்பநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றம் நீதிபதி தேன்மொழி முன் இன்று (டிச.21) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகினர். அப்போது, மத்தியஸ்தர் நேரில் ஆஜராகி, இன்னும் சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்?... வெளியேறிய முதல் போட்டியாளர் யார் தெரியுமா? - BIGG BOSS 8 TAMIL
இதனையடுத்து, சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசும்படி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த உத்தரவை அடுத்து, வழக்கு மீண்டும் சமரச தீர்வு மையத்தில் வந்த போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.