சென்னை: கராத்தே, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், பாராட்டுகளையும் குவித்து அசத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த பதினாறு வயதுள்ள மோனியா ராவ். ஏராளமான விருதுகளை இளம் வயதிலேயே வென்ற பெருமைக்குரிய மோனியா ராவ், ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், "கராத்தேயில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கலந்து கொண்டுள்ளேன். அதுமட்டுமல்லாமல், கட்டுரைகள், வரைபடங்கள், பேச்சு போட்டி என பல போட்டிகளில் பங்கு பெற்றுள்ளேன். 6ஆம் வகுப்பு படிக்கும்போது மார்ஷல் ஆர்ட்ஸ் கராத்தே (Martial Arts Karate) கற்றுக்கொண்டேன். மாவட்ட அளவில் சென்று அதில் ஆர்வம் அதிகரித்ததன் காரணமாக, தனியார் நிறுவனம் வழி பயிற்சி எடுத்து தேசிய அளவில் தங்கம் வென்றுள்ளேன்.
தேசிய அளவில் 16 தங்கங்கள்:
ஒவ்வொரு போட்டியில் இருந்தும் ஒரு புதிய முறையை கற்றுக்கொண்டேன். எனது குடும்பம் என்னை உற்சாகப்படுத்தினர். கராத்தேவில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்று தங்கமும், வெள்ளியும் வென்றுள்ளேன். அதன்படி, தேசிய அளவில் 16 தங்கங்களை வென்றுள்ளேன். இப்போது இருக்கும் தலைமுறைக்கு கராத்தே தேவையான ஒன்று.
தற்காப்புக்கு கராத்தே அவசியம்:
நாம் நம்மை காத்துக் கொள்ள வேறு ஒருவரை எதிர்பார்த்து கொண்டே இருக்க முடியாது. பெண்களுக்கு தற்காப்பு கலை என்பது மிகவும் தேவையானது. சுதந்திரமாக இருக்க விரும்பினால் நம்மை தற்காத்துக்கொள்ள இதை கற்றுக்கொண்டால், யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இதை அனைத்து பெண்களும் கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இதையும் படிங்க: அரசுப் பணி தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தே? - சென்னை ஐகோர்ட் முடிவென்ன?
இந்த தலைமுறையில் பல ஆரோக்கிய குறைபாடுகள் உள்ளது. குறிப்பாக, துரித உணவுகளால் யாரும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதில்லை. சமூகவலைத்தள வலைகளில் மாட்டிக் கொண்டுள்ளனர். வரும் காலத்தில் இதை நான் கட்டாயம் டெக்னிக்கோடு மற்றவர்களுக்கு சொல்லித் தருவேன். கராத்தே தவிர நுன்ஷக், ஷாய், போ போன்ற ஆயுதங்களையும் நான் கற்றுக்கொண்டுள்ளேன். அதிலும் தேசிய அளவில் தங்கம் வென்றுள்ளேன்.
பேச்சுப்போட்டி:
பேச்சுப்போட்டியில் எக்ஸ்டெம்போர்(Extempore) போன்ற போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளேன். மனப்பாடமாக பேசுவதை விட நம் ஆழ்மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பேசுவது எனது திறமை. மோட்டிவேஷன் (motivation) பேச்சுக்கள் மூலமாக பலரை ஊக்கப்படுத்தியுள்ளேன். அதுமட்டுமின்றி பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பேசியுள்ளேன்.
வெற்றி பெற்ற போட்டிகளில், பிரபலங்களில் கையால் பரிசுகளை வாங்கும்போது முதலில் எனது மாஸ்டர் பெயரை குறிப்பிடுவேன். அவர் தான் எனது முதல் பிரபலம். அவர் கையால் வாங்குவதில் நான் பெருமைப்படுகிறேன். அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரையின் கையால் விருதுகளை வாங்கியுள்ளேன். அவரிடம் நிறைய ஆலோசனைகளை கேட்டுள்ளேன். நீயா நானா கோபிநாத் அவர்களின் கையால் விவாதங்களுக்கான விருதுகளையும் வாங்கியுள்ளேன்.
வனத்துறையில் ஈடுபாடு:
வனத்துறை சார்ந்து நிறைய பரிசுகள் வாங்கியுள்ளேன். வனத்துறையில் எனக்கு ஈடுபாடு அதிகம். வண்டலூர் வனவிலங்குகள் காப்பகத்திற்கு தூதுவராக இருந்துள்ளேன். அதன் மூலம் வனத்துறை பற்றி நான் தெரிந்துகொண்டேன். வனத்துறை மேம்பட வேண்டும் என்று அதிலும் பங்காற்றியுள்ளேன். பல உயிரிகள் அழிந்துக் கொண்டிருக்கின்றது.
தேசிய விலங்கு புலிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. அதற்கு எந்த ஒரு முயற்சியுமே யாரும் எடுப்பதில்லை. தற்போது வண்டலூரில், வன உயிரிகளை காக்க நன்கொடை வழங்கி வருகிறார்கள். நம்மால் பராமரிக்க முடியவில்லை என்றாலும் நம் பணத்தின் மூலம் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். உங்களால் முடிந்த உதவியை வனவிலங்குகளுக்கு செய்து அவற்றை பாதுகாக்கலாம்" என்றார்.