ஹைதராபாத்: 2024 இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு திரைத்துறையில் பல்வேறு பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த திரை பிரபலங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்
ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி: கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் ஜாக்கி பக்னானி கோவாவில் கரம் பிடித்தார். இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். நடிகை ரகுல் ப்ரீத் சிங் ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’இந்தியன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
டாப்ஸி பன்னு மற்றும் மத்யாஸ் போ: கடந்த மார்ச் மாதம் நடிகை டாப்ஸி மற்றும் பேட்மிண்டன் வீரர் மத்யாஸ் போ ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் சட்டப்படி டிசம்பர் 2023இல் திருமணம் செய்து கொண்ட நிலையில், பாரம்பரிய முறைப்படி திருமணம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி உதய்ப்பூரில் நடைபெற்றது. நடிகை டாப்ஸி தமிழில் ’ஆரம்பம்’, ’ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால்: கடந்த ஜூன் மாதம் பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் 4 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சோனாக்ஷி சின்ஹா, ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா அர்ஜூன் மற்றும் உமாபதி தம்பி ராமையா: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா மகன் உமாபதி இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஐஸ்வர்யா அர்ஜூன் ’பட்டத்து யானை’ படத்தில் நடித்துள்ள நிலையில், உமாபதி, தம்பி ராமையா நடித்துள்ள ’ராஜாகிளி’ படத்தை இயக்கியுள்ளார்.
வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிகோலாய் சச்தேவ்: பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவரை தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் எளிமையான முறையில் ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஜூலை 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் ரஜினிகாந்த், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு: பிரபல நடிகை மேகா ஆகாஷ் நடிகர் சாய் விஷ்ணு என்பவரை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். மேகா ஆகாஷ் ’ஒரு பக்க கதை’ மற்றும் ரஜினிகாந்துடன் 'பேட்ட' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சித்தார்த் மற்றும் அதிதி ராவ்: பிரபல நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் கடந்த 2021இல் ’மகா சமுத்திரம்’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை மீதா ரகுநாத்: ’குட் நைட்’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்த நடிகை மீதா ரகுநாத் தனது உறவினரை கடந்த மார்ச் 17ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா: நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாதில் திருமணம் செய்து கொண்டார். சோபிதா துலிபாலா ’பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முன்னதாக நாக சைதன்யா, நடிகை சமந்தா ஆகிய இருவருக்கும் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.
காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணி காளிங்கராயர்: பிரபல நடிகர் ஜெயராம் மகனும், நடிகருமான காளிதாஸ் ஜெயராம், தனது நீண்ட நாள் காதலியும், மாடல் அழகியுமான தாரிணி காளிங்கராயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் குருவாயூர் கோயிலில் சில நாட்களுக்கு முன் விமர்சையாக நடைபெற்றது.
இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை திக்குமுக்காட வைத்த சர்ச்சைகள் ரீவைண்டு! - 2024 TAMIL CINEMA CONTROVERSIES
கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில்: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை சில நாட்களுக்கு முன் கோவாவில் திருமணம் செய்து கொண்டார். கேரளாவை சேர்ந்த ஆண்டனி தட்டில் துபாயில் தொழில் செய்து வருகிறார். இவர்களது திருமணம் பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடைபெற்றது.