ETV Bharat / state

'அமித் ஷாவுக்கு கண்டனம்' - திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? - DMK WORKING COMMITTEE MEETING

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் என்ப ன உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக செயற்குழு கூட்டம்
திமுக செயற்குழு கூட்டம் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2024, 12:04 PM IST

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஐ பெரியசாமி, பொன்முடி மற்றும் அமைச்சர்கள் என 600 மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் ,ஃபெஞ்சல் புயலில் முன்கள வீரராக நின்று மக்களைக் காப்பாற்றிய திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு, ஃபெஞ்சல் புயல் பேரிடர் நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு உடனடியாக வழங்க வேண்டும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கைவிட வேண்டும், டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்த அதிமுகவும், மாநில உரிமைகளைப் பறிக்கும் அப்படியொரு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி டங்ஸ்டன் கனிம ஏலம் விட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும் போடும் கபட நாடகத்திற்கு கண்டனம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கல்வித்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் திட்டமிட்டு வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறைக்கு கண்டனம், “குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்திற்குப் பதில் சாதி பாகுபாடற்ற “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தொடங்கி வைத்துள்ள திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதி சமத்துவத்தைக் குறளாகத் தந்த அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினை பெருமிதத்துடன் கொண்டாடுவோம், தமிழர் பண்பாட்டுத் திருநாளாக பொங்கல் நன்னாளை தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் கொண்டாடுவோம் என மொத்தம் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவற்றில் குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானத்தில், 'அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் - அடித்தட்டு மக்களின் குரலாக அரசியல் நிர்ணய சபையில் எதிரொலித்து- இரவு பகலாக பாடுபட்டு - உலக அரங்கில் இந்திய ஜனநாயகம் ஒளிரும் வகையில் - வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி- அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இச்செய்தி கிடைத்தவுடன் உணர்ச்சிப் பிழம்பாக பீறிட்டுக் கிளம்பி- மாநிலமெங்கும் அனல் பறக்கும் ஆவேசப் போராட்டத்தை நடத்திய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்- அப்போராட்டங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனக் குரல் எழுப்பிய தி.மு.க மற்றும் தோழமைக் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜனநாயகத்தின் திருக்கோவிலான நாடாளுமன்றத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரே இப்படி அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசி அருவருக்கத்தக்க அநாகரீக அரசியலை அரங்கேற்றியிருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மீளாத் தலைகுனிவு. எவரும் ஏற்கமுடியாத - எந்தக் காலத்திலும் நடைபெற்றிடாத ஒரு உள்துறை அமைச்சரின் பேச்சை திசை திருப்ப நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்கள் அதைவிட கேலிக்கூத்தானது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.' என அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.